×

மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தக் கூடாது: விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அறிவுரை

சென்னை: தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் சார்பில் உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியுமான சவுமியா சுவாமிநாதன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: முறையற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளின் (ஆன்டிபயாடிக்ஸ்) பயன்பாட்டினால் இந்தியாவில் ஆண்டுக்கு ஏறத்தாழ 50 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர். குறிப்பிட்ட நோய் பாதிப்பை தெரிந்து கொள்ளும் முன்னரே நோய் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போக்கு உள்ளது. மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களும் மருத்துவமனைகளும் நோய் எதிர்ப்பு மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர்-செயலர் வின்சென்ட் தலைமையுரை ஆற்றிப் பேசும்போது, நுண்ணுயிர் எதிர்ப்பு நிலை என்பது உலகளாவிய பிரச்னையாக மாறியுள்ளது.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் இதை தடுப்பதற்கான கொள்கை திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார். மன்றத்தின் இணை பேராசிரியர் வி.ராமசாமி வரவேற்றார். அண்ணா பல்கலைக்கழக நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் தேவசேனா அறிமுகவுரை ஆற்றினார். அழகப்பா தொழில்நுட்பக்கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் வாழ்த்திப் பேசினார். மன்றத்தின் அறிவியல் அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கு பின் நிருபர்களுக்கு சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டி: சாதாரண சளி காய்ச்சலுக்கு பாராசிட்டமல் மாத்திரை போதுமானது. இதற்கெல்லாம் நோய் எதிர்ப்பு மருந்து அவசியமில்லை. கொரோனா காலத்தில் அளவுக்கு அதிகமாக நோய் எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக் கொண்டதால் கரும்பூஞ்சை நோய் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை அவர் தொடங்கி வைத்தார்.

The post மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தக் கூடாது: விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Soumya Swaminathan ,Chennai ,World Antimicrobial Awareness Week ,Tamil Nadu State Council of Science and Technology ,Alagappa College of Technology ,Anna University ,MS Swaminathan Research Foundation ,World Health Organization ,Dinakaran ,
× RELATED ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்