தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை சர்ச்சில் நடந்த திருமணத்தை திடீரென வந்த இளம்பெண் நிறுத்தும்படி தகராறு செய்தார். மாப்பிள்ளையுடன் ஏற்கனவே, திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்துவதாக அவர் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. வண்ணாரப்பேட்டை எஸ்.பி.கோயில் தெருவில் உள்ள தேவாலயத்தில் நேற்று முன்தினம் இரவு புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நேன்சி பிரியங்கா என்பவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம், நெய்தமங்கலத்தை சேர்ந்த விஜின் (27) என்பவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு திருமணம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென அங்கு வந்த கூடலூரைச் சேர்ந்த பிரியதர்ஷினி (28), திருமணத்தை நிறுத்தக் கோரி சண்டை போட்டார். இதுகுறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்தார். அதில், ஏற்கனவே விஜினுக்கும் எனக்கும் திருமணம் நடந்துவிட்டது. நாங்கள் இருவரும் மறைமலைநகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்தபோது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு பாரிமுனையில் உள்ள அந்தோணியார் சர்ச்சில் நண்பர்கள் துணையுடன் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் சேலையூரில் தனி வீடு எடுத்து வசித்து வந்தோம்.
கடந்த ஜூலை 22ம் தேதி, எங்கள் வீட்டில் எனக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். நான் பெற்றோரிடம் கூறி அதனை நிறுத்திவிட்டு, உன்னுடன் சேர்ந்து வாழ்கிறேன் என்று விஜின் கூறி சென்றார். ஆனால், மீண்டும் வரவில்லை. இதுகுறித்து நான் குமரி மாவட்டம் மார்த்தாண்டம், நித்திரைவிளை காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் விசாரணை செய்துவிட்டு என்னை அனுப்பி வைத்து விட்டனர். தற்போது வண்ணாரப்பேட்டையில் திருமண ஏற்பாடு செய்வது அறிந்து இங்கு வந்தேன் என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் விஜினை திருமணம் செய்ததற்கான எந்த சான்றும் பிரியதர்ஷினியிடம் இல்லை. மேலும் போட்டோ ஆதாரமும் இல்லை. அதனால் தண்டையார்பேட்டை ஆய்வாளர் விவேகானந்தன், தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் ஆய்வாளர் சஜிபா ஆகியோர் உரிய ஆவணம் கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி அவரை அனுப்பி வைத்தனர். இருந்தபோதும் அந்த பெண் திருமணம் நடந்த தேவாலயத்தில் சென்று சண்டை போட்டதால் திருமண வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பிரியதர்ஷினியை தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் கீதா அழைத்து வந்தார். அவரிடம் உதவி ஆய்வாளர் விசாரணை நடத்தி உரிய ஆவணம் கொண்டு வந்து காண்பிக்க கோரி அனுப்பி வைத்தார். பிறகு பிரியதர்ஷினி தன்னை திருமண வீட்டார் அடித்து காயப்படுத்தினர் என்று கூறி ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இருப்பினும் விஜின் -நேன்சி பிரியங்கா திருமணம் நடந்து முடிந்தது. அந்த பெண் உண்மையைத்தான் கூறுகிறாரா அல்லது நாடகம் ஆடுகிறா என்பது குறித்து தண்டையார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post மணமகன் தன்னுடன் குடித்தனம் நடத்திவிட்டு ஏமாற்றியதாக சர்ச்சில் நடந்த திருமணத்தை நிறுத்தும்படி பெண் தகராறு appeared first on Dinakaran.