இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 7 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களின் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் பதிவான நம்பர்களை வைத்து யார், யார் தொடர்புகொண்டு கஞ்சா பொட்டலங்கள் சப்ளை செய்தார்கள் என தனிப்படை போலீசார்விசாரணை செய்தனர். காட்டாங்குளத்தூர் பகுதியில் தங்கியுள்ள கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா ஆயில் டப்பாக்கள் இருப்பதாக ரகசிய தகவல் வந்தது. இதன்படி, கடந்த மாதம் 30ம் தேதி தனிப்படை போலீசார், காட்டாங்கொளத்தூர் பகுதிக்கு சென்று அங்கு அறையில் பதுங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை கைது செய்து விசாரித்தனர்.
இதில், கேரளாவை சேர்ந்த ஆசிப்(21), முகமது(21) என்றும் காட்டாங்கொளத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்துள்ளனர் என்றும் தெரிந்தது. அவர்களது அறையில் சோதனை செய்து கஞ்சா ஆயில், சிறிய டப்பாக்கள் 15 பறிமுதல் செய்தனர். 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிறிய டப்பாவில் 3 கிராம் கஞ்சா ஆயில் இருப்பது தெரியவந்தது. கஞ்சா ஆயில் டப்பாவை 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 5ஆயிரம் ரூபாய் வரை சப்ளை செய்துள்ளனர். இதையடுத்து கல்லூரி மாணவர்கள் 2 பேரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் யார், யாரிடம் தொடர்புகொண்டு பேசியுள்ளனர் என்றும் கஞ்சா ஆயில் சப்ளை சென்னைக்கு மட்டுமா? வெளி மாநிலங்கள் மாவட்டங்களுக்கு சப்ளை செய்துள்ளார்களா என்பது குறித்தும் செல்போனில் பதிவான எண்களை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகனின் செல்போன் நம்பர் பதிவாகியுள்ளது. இதையடுத்து இன்று காலை தனிப்படை போலீசார், மன்சூர்அலிகானின் மகன் உட்பட 4 பேரை ஜெ.ஜெ.நகர் காவல்நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். வழக்கு தொடர்பாக அண்ணாநகர் துணை ஆணையர் டாக்டர் சினேகபிரியா விசாரணை நடத்தி வருகின்றார்.
கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 3ம் தேதி கல்லூரி மாணவர்கள் வர்சல், ஆர்ணி, பாலாஜி ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்தநிலையில் மீண்டும் அவர்கள் 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஜெ.ஜெ.நகர் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீஸ் கஸ்டடியில் 2 நாட்கள் விசாரணை செய்யலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கல்லூரி மாணவர்கள் 3 பேரையும் காவல்நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை விவகாரம்; நடிகர் மன்சூர் அலிகான் மகனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை: செல்போனில் நம்பர் பதிவானதால் விளக்கம் appeared first on Dinakaran.