கடலூரில் 5 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கியதால் அண்ணாமலையை பெண்கள் முற்றுகை: சரமாரி கேள்வியால் ஓட்டம்

கடலூர்: கடலூரில் புயல் வெள்ள நிவாரணம் வழங்கிய அண்ணாமலை 5 பேருக்கு மட்டும் கொடுத்துவிட்டு புறப்பட்டதால் ஆத்திரமடைந்த பெண்கள், அவரை முற்றுகையிட்டு சரமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட திடீர்குப்பம், ஆல்பேட்டை உள்ளிட்ட பகுதி மக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து, கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் தென்பெண்ணையாற்றின் அருகே பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அங்கு 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டோக்கன்களுடன் வரிசையாக காத்திருந்தனர். காலை 11 மணிக்கு முன்பே அவர்கள் காத்திருந்த நிலையில் மதியம் 12.30 மணியளவில் வந்த பாஜ தலைவர் அண்ணாமலை, 5 பேருக்கு மட்டுமே பாய், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து காரில் ஏறி அடுத்த இடத்துக்கு புறப்பட தயாரானார். இதனிடையே அங்கிருந்த பாஜக நிர்வாகிகள், ‘போங்க… போங்க… உங்க வீட்டிற்கே நிவாரண பொருட்கள் தேடி வரும்’ என கூறி டோக்கனுடன் காத்திருந்தவர்களை வலுக்கட்டாயமாக விரட்டியடித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை முற்றுகையிட்டு எதற்காக எங்களுக்கு டோக்கன் கொடுத்தீர்கள். எங்களை ஏன் அலைய வைக்கிறீர்கள். விளம்பரத்துக்காக செய்கிறீர்களா? என்று சரமாரி கேள்வி எழுப்பினர். ஆனால் பொதுமக்களின் கேள்விக்கு பதிலளிக்காத அண்ணாமலை அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு சென்றார். ஏமாற்றமடைந்த பொதுமக்களும் அங்கிருந்து விரக்தியுடன் புறப்பட்டு சென்றனர்.

* ‘முதல்வருக்கு நிதி கேட்பதற்கு எல்லா உரிமையும் உள்ளது’
கடலூரில் அண்ணாமலை நிருபர்களிடம் கூறுகையில், ‘வெள்ள பாதிப்புக்காக முதல்வருக்கு நிதி கேட்பதற்கு எல்லா உரிமையும் உள்ளது. அதனை அவசர தேவைக்கு பயன்படுத்தலாம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு துணை முதலமைச்சர் இரண்டு முறை வந்துள்ளார். இது நல்ல விஷயம். தமிழகத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடி தேவையென்றால் ஒன்றிய அரசு தரும்.

டெல்லி சென்று பாதிப்பு குறித்து பிரதமரிடமும், கட்சி தலைவர் நட்டாவிடமும் தெரவிப்போம். ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு பேரிடர்களில் சிக்கும் கடலூர் மாவட்டத்திற்கு சிறப்பு நிதி உருவாக்க வேண்டும். அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை’ என்றார். தொடர்ந்து மரக்காணம் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய உப்பளங்களை பார்வையிட்டார்.

The post கடலூரில் 5 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கியதால் அண்ணாமலையை பெண்கள் முற்றுகை: சரமாரி கேள்வியால் ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: