விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பெஞ்சல் புயல் வெள்ளத்தால் 26 பேர் பலி: ரூ.1,500 கோடி வர்த்தகம் பாதிப்பு

சென்னை: பெஞ்சல் புயல் சூறையாடிய விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் ரூ.1,500 கோடிக்கு வர்த்தகம் பாதித்துள்ளது. பெஞ்சல் புயல் கடந்த 30ம்தேதி இரவு கரையை கடந்தது. அப்போது பெய்த பேய் மழையால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வடமாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன.

விழுப்புரம் மாவட்டம்: விழுப்புரம் மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. 13 ஆயிரம் ெஹக்டேர் நெல், சிறுதானிய பயிர்கள், வாழை சேதமடைந்துள்ளது. இதுதவிர சுமார் 60 ஆயிரம் ஏக்கர் சவுக்குதோப்பு பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகரில் 8 ஆயிரம் வீடுகளையும், மாவட்டம் முழுவதும் 35 ஆயிரம் வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 2 வாலிபர் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். 97 கால்நடைகள், கன்றுகளும், 56 வாத்துகள் மற்றும் கோழிகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தன.

10 ஆயிரம் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். ரூ.850 கோடிக்கு வர்த்தகம் முடங்கியுள்ளது. இதேபோல் கட்டுமானம், வேளாண்மை சார்ந்த தொழிலில் ஈடுபட்ட 1.5 லட்சம் பேர் வீட்டில் முடங்கி உள்ளனர். 3 ஆயிரம் மீனவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம்: கடலூர் மாவட்டத்தில் 80 ஆயிரம் ஹெக்டேர் வேளாண், தோட்டக்கலை பயிர்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடிசை, ஓடு வீடுகள் உள்பட மொத்தம் 350 வீடுகள் சேதமடைந்துள்ளன 3 பேர் பலியாகி உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் பேர் தொடர்ந்து 5வது நாளாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரூ.500 கோடிக்குமேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 164 குடிசை மற்றும் ஓடு வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார். 39 ஆடு, மாடுகள் சேதமடைந்துள்ளன. திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி டவுன் உள்ளிட்ட பகுதியில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழந்துள்ளது.

நிவாரண முகாம்களில் 434 குடும்பங்களைச் சேர்ந்த 1586 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ரூ.150 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதித்துள்ளது. சுமார் 34,560 ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். 37 வீடுகள் இடிந்து சேதமடைந்தது. 40 கால்நடைகள் பலியானது. மாவட்டம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. ரூ.10 கோடிவரையில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, மூன்று நாட்களில் பெய்த மழையில் 153 வீடுகள் சேதமாகின. மேலும், 31 கால்நடைகள் மற்றும் கோழிப்பண்ணைகளில் இருந்த, 15,021 கோழிகளும் இறந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் மூழ்கியது. போச்சம்பள்ளி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டம்: சேலத்தில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. திருமணிமுத்தாற்றில் வெள்ளம் காரணமாக சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவில் சேலத்திலிருந்து பழநிக்கு புறப்பட்ட அரசு பஸ், வெள்ளத்தில் நின்றது. கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

ரயில்கள் பாதிப்பு: பெஞ்சல் புயல் மழை, பாதிப்பு காரணமாக தென் மாவட்டங்களுக்கு நேற்று காலையில் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக வந்தன. குருவாயூரில் புறப்பட்டு இன்று நெல்லை வழியாக சென்னை செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிப்பு: தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் 2வது நாளாக நேற்றும் கடலூர்- புதுச்சேரி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

* மரத்தில் 17 மணி நேரம் போராடிய தாய், மகன் உயிருடன் மீட்பு மண்ணில் புதைந்து தந்தை உயிரிழப்பு
தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏமப்பூர் கிராமத்தை சேர்ந்த கலையரசன் (57) என்பவரது வீடு நேற்று முன்தினம் காலை மூழ்கியது. கலையரசன், மனைவி சுந்தரி (50), மகன் புகழேந்தி (25) என 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் ஆற்றின் நடுவே இருந்த வேப்பமரத்தின் கிளையில் ஏறி அமர்ந்து காப்பாற்றும்படி கூக்குரல் எழுப்பினர். மதியம் 2.30 மணிக்குமேல் பொதுமக்கள் சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு மாவட்ட ஆட்சியரின் உதவி கோரினர்.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் பழனி ஏற்பாட்டில், கோவை சூலூர் விமானப்படை விமான தளத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் இரவு அங்கு வரவழைக்கப்பட்டது. இடி, மின்னல், மழை, இருட்டு காரணமாக மீட்பு பணி பாதித்தது. ஆற்றில் நீர்வரத்து குறைந்ததும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விசைப்படகில் சென்று 17 மணி நேரத்துக்கு பின் சுந்தரி, புகழேந்தி ஆகிய இருவரையும் மீட்டனர். கலையரசன் மட்டும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். மலட்டாற்று நடுவே மண்ணில் புதையுண்ட நிலையில் நேற்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டது.

* புதிய மேம்பாலம் சேதம் ஏன்? அரசு விளக்கம்
தண்டராம்பட்டு அடுத்த அகரம் பள்ளிப்பட்டு பகுதியில் அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு 5 மாதத்திற்கு முன் திறக்கப்பட்டது. இந்நிலையில், சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர் நேற்று முன்தினம் அதிகாலை திறந்து விடப்பட்டது. இதனால் அந்த மேம்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதை அமைச்சர் எ.வ.வேலு நேற்று அங்கு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சாத்தனூர் அணையிலிருந்து 2,00,000 கனஅடிக்கு மேல் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் இப்பாலமானது, அணையிலிருந்து 24 கி.மீ, தொலைவில் உள்ளதால், தொடர் மழையினால் பாம்பாறு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீரும், இணைந்து இப்பாலத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பாலத்தின் மேற்பரப்பிற்கு மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால் இப்பாலம் பெரும் சேதமடைந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து மீண்டும் பாலம் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

The post விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பெஞ்சல் புயல் வெள்ளத்தால் 26 பேர் பலி: ரூ.1,500 கோடி வர்த்தகம் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: