×
Saravana Stores

சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற காங்கிரசாரை தடுத்த போலீசார்


லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் முகலாயர் கால மசூதியான ஷாஹி ஜமா மஸ்ஜித், கோயில் மீது கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிகாரிகள் மசூதியில் ஆய்வு நடத்தினர். இதற்கு எதிர்ப்புகள் எழுந்ததால் கடந்த 24ம் தேதி கலவரம் வெடித்தது. இதில் 4 பேர் பலியாகினர். கலவரம் பாதித்த பகுதியில், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டப்பிரிவு 163ன்கீழ் வெளியாட்கள் நுழைய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மாதம் 30ம் தேதியுடன் தடை உத்தரவு முடிந்த நிலையில், டிசம்பர் 2ம் தேதி சம்பல் பகுதிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தலைமையிலான காங்கிரஸ் தூதுக்குழு செல்வதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் நேற்று முன்தினமே லக்னோவில் மால் அவென்யு பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பல காங்கிரஸ் தலைவர்கள் வீடுகள் முன்பாகவும் தடுப்பு அமைக்கப்பட்ட நிலையில், அஜய் ராய் மற்றும் தொண்டர்கள் இரவே கட்சி அலுவலகத்திற்கு வந்து அங்கேயே தங்கியிருந்தனர். திட்டமிட்டபடி நேற்று காலை அவர்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் காங்கிரசாருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கேயே போலீசாரை கண்டித்து தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற காங்கிரசாரை தடுத்த போலீசார் appeared first on Dinakaran.

Tags : Sambal ,Lucknow ,Shahi Jama Masjid ,Chambal, Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்