×

2014ல் பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் வகுப்புவாத பதற்றம் அதிகரிப்பு: மோடிக்கு 17 பிரபலங்கள் கடிதம்

புதுடெல்லி: பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் வகுப்புவாத பதற்றம் அதிகரித்துள்ளதாகவும், அதனை தடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு 17 பிரபலங்கள் கடிதம் எழுதியுள்ளனர். ஒன்றிய அரசின் திட்டக் குழு முன்னாள் செயலாளர் என்.சி.சக்சேனா, முன்னாள் ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, இங்கிலாந்துக்கான முன்னாள் இந்திய தூதர் சிவ் முகர்ஜி, முன்னாள் ராணுவ துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சமீருதீன் ஷா உள்ளிட்ட 17 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், ‘கடந்த 2014ல் பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் இந்து-முஸ்லிம் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை மற்றும் பிரிவினையை ஊக்குவிக்கும் போக்குகள் சில மாநிலங்களில் அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக அரசே எழுந்து நிற்கும் சூழல் இதற்கு முன்பு இருந்ததில்லை. மத சிறுபான்மையினருக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்துள்ளன. மாட்டிறைச்சி என்ற பெயரில் கும்பல் தாக்குதல்கள், இஸ்லாமிய எதிர்ப்பு உரைகள் மற்றும் முஸ்லிம் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. முஸ்லிம் வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

பழங்கால மசூதிகள் மற்றும் தர்காக்களின் சொத்துக்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும். வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் சட்டம் நடைமுறையில் இருந்தபோதிலும், சில நீதிமன்றங்கள் இத்தகைய கோரிக்கைகளை அனுமதிப்பதால் தேவையற்ற பதற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அனைத்து மாநில அரசுகளும் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும். நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் பன்முக கலாசாரத்தை உறுதிப்படுத்த அனைத்து மதங்களின் மாநாடு நடத்தப்பட வேண்டும். வளர்ந்த நாடாக மாறுவதற்கான முயற்சிகளுக்கு வகுப்புவாத வன்முறை பெரிய தடையாக உள்ளது’ என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

The post 2014ல் பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் வகுப்புவாத பதற்றம் அதிகரிப்பு: மோடிக்கு 17 பிரபலங்கள் கடிதம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Modi ,New Delhi ,Union Government Planning Commission ,Ex-Secretary ,N.C. Saxena ,Ex- ,Governor ,Najeeb Jung ,
× RELATED அசாம் மாநிலம் போல ஒடிசா மாநிலத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை