பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவையாற்றியவர்களுக்கு அவ்வையார் விருது: வரும் 31ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்


சென்னை: பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவையாற்றியவர்களுக்கு அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு வருகிற 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அவ்வையார் விருது சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச்சிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுபவருக்கு ரூ.1.50 லட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த விருது பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேம்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர் திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியில், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகசிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும்.  பெண்களுக்கான இச்சமூக சேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள் விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. சென்னை மாவட்ட பொதுமக்களிடமிருந்து விருதிற்கு தகுதியான விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in) விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 31ம் தேதி ஆகும்.

வலைதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும், அத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய கையேட்டினை தயார் செய்யவும் தேவையான ஆவணங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. வருகிற 31ம் தேதி வரை இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் மற்றும் அனைத்து ஆவணங்களை இணைத்து முழுமையான கையேடு தமிழ் (மருதம் எழுத்துரு) மற்றும் ஆங்கிலத்தில் தலா 3 நகல்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அடுத்த மாதம் 3ம் தேதி மாலை 4 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு சிங்காரவேலனார் மாளிகை, 8வது தளத்தில் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு சென்னை மாவட்ட மக்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவையாற்றியவர்களுக்கு அவ்வையார் விருது: வரும் 31ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: