சென்னை: சென்னை – திருச்செந்தூர் அதி விரைவு ரயில் எழும்பூருக்கு பதில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் கரையைக் கடந்தது. இதனால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக விழுப்புரத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே உள்ள ரயில்வே பாலம் மற்றும் திருக்கோவிலூர் – தண்டரை இடையே உள்ள ரயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை – திருச்செந்தூர் அதி விரைவு ரயில் மாலை 4.10 மணிக்கு எழும்பூருக்கு பதில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும். சென்னை எழும்பூர் – விழுப்புரம் இடையே பகுதியாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் கொல்லம் விரைவு ரயில் மாலை 6 மணிக்கு புறப்படும்.
மேலும், எழும்பூர் – ராமேஸ்வரம் அதி விரைவு ரயில் மாலை 5.45-க்கு பதில் ஓரு மணி நேரம் தாமதமாக 8.45-க்கு புறப்படும். எழும்பூர் கன்னியாகுமரி விரைவு ரயிலும் ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 6.20 மணிக்கு புறப்படும். ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட சென்னை எழும்பூர் – மன்னார்குடி ரயில்(16179) சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 10.55 மணிக்குப் பதிலாக 11.55 மணிக்குப் புறப்படும். பிர்சாபூர் – ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில்(20498) வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. இது சென்னை எழும்பூர், சென்னை கடற்கரை, அரக்கோணம், காட்பாடி, சேலம், கரூர், திருச்சி வழியாகச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post ரயில் சேவையில் மாற்றம்.. திருச்செந்தூர் அதி விரைவு ரயில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!! appeared first on Dinakaran.