×
Saravana Stores

பள்ளிபாளையத்தில் 20க்கும் மேற்பட்டோரை துரத்தி கடித்த வெறிநாய்: பிடிக்க முயன்ற நகராட்சி பணியாளரையும் பதம் பார்த்தது

பள்ளிபாளையம், டிச.2: பள்ளிபாளையத்தில் தெருக்களில் வருவோரை துரத்தி துரத்தி தெருநாய் கடித்ததால் 20க்கும் மேற்பட்டோர், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். நாயை பிடிக்க முயன்ற நகராட்சி தூய்மை பணியாளரையும் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளிபாளையம் நகராட்சி 6வது வார்டு பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக ஒரு கருப்பு நாய் தெருவில் செல்வோரை துரத்தி துரத்தி கடிக்க தொடங்கியது. நாயால் கடிபட்டவர்கள் ரத்தம் ஒழுகிய நிலையில் அரசு மருத்துவமனைக்கு வரத்தொடங்கினர். நேற்று மதியம் வரை சுமார் 20 பேர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 6வது வார்டு பகுதியான குட்டைமுக்கு, காந்திபுரம், ஆர்எஸ் ரோடு பகுதியில் தெருக்களில் நடமாடவே மக்கள் அச்சமடைந்தனர். கருப்பு நிறத்தில் செல்லும் நாயை கண்டாலே மக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். அந்த வெறிபிடித்த நாயும் இலக்கில்லாமல் சந்து பொந்துகளில் சுற்றி சுற்றி வந்து கடித்தது.

இது குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். நகராட்சியின் சுகாதார பணியாளர்கள் பலரும் நாயை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனாலும் அவர்களுக்கு சிக்காமல் போக்கு காட்டியது. ஒரு கட்டத்தில் அப்பகுதியின் தூய்மைப்பணியாளர் சண்முகசுந்தரம், நாயை கண்டதும் நைசாக பிடிக்க முயன்றார். ஆனால் அவருக்கு போக்கு காட்டிய நாய் அவரை கடித்துவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இந்நிலையில் நேற்று பிற்பகல் ஒரு வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த வெறிநாயை நகராட்சி பணியாளர்கள் வலை போட்டு லாவகமாக பிடித்து, சிகிச்சைக்காக கால்நடை மருத்துவரிடம் அனுப்பி வைத்தனர். நாய் சிக்கிய தகவல் சமூக இணைதளங்களில் வெளியானதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

The post பள்ளிபாளையத்தில் 20க்கும் மேற்பட்டோரை துரத்தி கடித்த வெறிநாய்: பிடிக்க முயன்ற நகராட்சி பணியாளரையும் பதம் பார்த்தது appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,6th Ward ,
× RELATED பள்ளிபாளையம் நகர மன்ற கூட்டம்