கிருஷ்ணகிரி, டிச.2: பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. விடுமுறை தினமான நேற்று பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக, கடந்த 2 நாட்களாக பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாம்பாறு அணையில் 95 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதே போல ஊத்தங்கரை 71, பெனுகொண்டாபுரம் 46.40, பாரூர் 37.20, போச்சம்பள்ளி 36, நெடுங்கல் 28.40, கே.ஆர்.பி. அணை 21.60, கிருஷ்ணகிரி 12.20, தேன்கனிக்கோட்டை 5, ஓசூர் 4.10, ராயக்கோட்டை 3, கெலவரப்பள்ளி அணை 4, சூளகிரி, சின்னாறு அணை தலா 2 மில்லி மீட்டர் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 367.90 மில்லி மீட்டர் மழை பெய்தது.
நேற்றும் காலை முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்தபடி இருந்தது. பிற்பகல் முதல் மாவட்டத்தில் பல இடங்களிலும், மாலையில் கிருஷ்ணகிரியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடானது. மழையால் சாலையோர வியாபாரிகள் வியாபாரத்தை தொடர முடியாமல் வீடு திரும்பினர். வாகன ஓட்டிகளும் சிரமத்துடன் சென்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கிருஷ்ணகிரியில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். நேற்று தொடர் மழை காரணமாக, பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கினர். மழை காரணமாக கடும் குளிர் வாட்டி வதைத்தது. கனமழையால் பொதுமக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்தனர். குறிப்பாக மளிகை பொருட்கள், பால் உள்ளிட்டவற்றை வாங்க முடியாமல் தவித்தனர்.
விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) பணிக்கு வெளியூருக்கு செல்பவர்கள், பஸ்சுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். நகரில் திரும்பிய இடமெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பள்ளம், மேடு தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஆங்காங்கே சிறிய மரங்கள் முறிந்து விழுந்தன. அதே போல், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அந்த நீரை வெளியேற்ற முடியாமல் பக்கத்து வீடுகளுக்கு தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டது. மழையால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வர துவங்கியுள்ளது. ஒரு புறம் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டாலும், தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
அன்றாட வருவாயினை கொண்டு குடும்பத்தை நடத்தும், நடைபாதை வியாபாரிகள் கடைகளை திறக்க முடியாததால், வருவாய் இழப்பு ஏற்பட்டது. தொடர் மழை பெய்த போதும், நேற்று மின்சாரம் துண்டிக்கப்படாதது பொதுமக்களுக்கு ஆறுதலாக இருந்தது.
The post கொட்டி தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.