புதுடெல்லி: பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் பாம்புக்கடி பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் இறப்பை அரசுக்கு தெரிவிக்கக்கூடிய ஒன்றாக மாற்ற வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு அவசர கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளது. பாம்புக்கடி தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார். அதில், பாம்புக்கடி பொதுசுகாதாரப் பிரச்னை ஆகும். சில சந்தர்ப்பங்களில் அவை இறப்பை ஏற்படுத்துகின்றன.
இதனால் விவசாயிகள், பழங்குடி மக்கள் போன்றோர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். பாம்புக்கடி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதில், வரும் 2030க்குள் இந்தியாவில் இருந்து பாம்புக்கடி தொடர்பான இறப்புகளை பாதியாக குறைப்பது, பாம்புக்கடி மூலம் ஏற்படும் பிரச்னைகளை தடுத்து கட்டுப்படுத்தும் விதமாக தேசிய செயல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.அதன்படி பாம்புக்கடி மேலாண்மை, கட்டுப்பாடு மற்றும் தடுப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள பல தரப்பினரின் பொறுப்புகளை இத்திட்டம் வரையறுத்துள்ளது.
மேலும் இது பாம்புக்கடி மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளின் கண்காணிப்பை வலுப்படுத்துவதோடு,பாம்புக்கடி சம்பவங்கள் மற்றும் இறப்புகளைத் துல்லியமாகக் கண்காணிக்கவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையது. மேலும், பாம்புக்கடி சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகள் பற்றி அரசுக்கு தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். இது அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பொருந்தும். இதற்காக மாநில பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் பாம்புக்கடி மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளை ‘‘அறிவிக்கக்கூடிய நோயாக” மாற்ற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பாம்புக்கடி பாதிப்பை அரசுக்கு தெரிவிப்பது கட்டாயமாகிறது: ஒன்றிய அரசு கடிதம் appeared first on Dinakaran.