புதுடெல்லி: ஜாமீன் மனுவை நிராகரிக்கும்போது, விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றங்கள் காலக்கெடு நிர்ணயிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. போலி ரூபாய் நோட்டு விவகாரத்தில் இரண்டரை ஆண்டாக சிறையில் இருக்கும் ஒருவருக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஜாமீன் மனுக்களை நிராகரிக்கும் போது, விசாரணையை முடிப்பதற்கான காலக்கெடுவை உயர் நீதிமன்றம் நிர்ணயித்து வருவதை ஒவ்வொரு நாளும் கவனிக்கிறோம்.
இந்த வழக்கிலும் இதே போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டரை ஆண்டாகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உயர் நீதிமன்றங்களின் இதுபோன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது கடினம். இதுபோன்ற உத்தரவுகள் விசாரணை நீதிமன்றங்களின் செயல்பாட்டை மோசமாக பாதிக்கும். மேலும், வழக்குதாரர்களுக்கு தவறான நம்பிக்கையை ஏற்படுத்தும். ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு.
ஒரு வழக்கில் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் குற்றம்சாட்டப்பட்டவர் நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்திருந்தால், சட்டம் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் அவர் ஜாமீன் பெற தகுதி பெற்றிருந்தால், நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும். அதை மறுத்து விசாரணையை விரைவுபடுத்துவது தீர்வாகாது. ஜாமீன் மறுத்து விசாரணைக்கான காலக்கெடு நிர்ணயிப்பது, விதிவிலக்கான சூழ்நிலைகளில் வழங்கக்கூடிய ஒரு உத்தரவு. இதை அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
The post ஜாமீன் மனு நிராகரிக்கும் போது விசாரணை முடிக்க காலக்கெடு நிர்ணயிப்பது ஏற்புடையதல்ல: உச்ச நீதிமன்றம் அதிருப்தி appeared first on Dinakaran.