பும்ராவுக்கு நிகர் பும்ராதான்… எதிர்கால வரலாற்றையே மாற்ற கூடியவர் ஜெய்ஸ்வால்: மேக்ஸ்வெல் பாராட்டு

சிட்னி: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 40 சதங்களுக்கு மேல் அடிப்பார் என்றும் பவுலர்களில் பும்ரா நம்பர் 1 பவுலராக இருந்து வருவதாகவும் ஆஸ்திரேலியா அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் கூறி உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பவுலர்களும், பேட்ஸ்மேன்களும் ஆஸ்திரேலியா வீரர்களை மனதளவில் பாதிப்படைய செய்துள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலியா மண்ணில் தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்து பலரது பாராட்டை பெற்றார். 22 வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலித்து வரும் ஜெய்ஸ்வாலின் ஆட்டம் குறித்து ஆஸ்திரேலியா அணியின் கிளென் மேக்ஸ்வெல் கூறியதாவது:-

இந்திய அணியின் ஜெய்ஸ்வாலிடம் வீக்னஸ் இருப்பதாக தெரியவில்லை. ஷார்ட் பால்களை மிகச்சிறப்பாக எதிர்கொள்கிறார். ட்ரைவ் ஷாட்களை அற்புதமாக ஆடுகிறார். ஸ்பின்னர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்குகிறார். அழுத்தமான நேரங்களில் கூட விக்கெட்டை காப்பாற்றி, நீண்ட நேரம் பேட்டிங் செய்கிறார். என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் 40 சதங்களுக்கும் மேல் அடிப்பார் என்று நினைக்கிறேன்.

எதிர்காலத்தில் வரலாற்றையே மாற்றக் கூடிய பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் ஜொலிப்பார். கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவராக ஜஸ்பிரிட் பும்ரா மாறி வருகிறார். ஆல் டைம் சிறந்த பவுலர்களில் ஒருவராக பும்ரா இருப்பார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஏனென்றால் அவருக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினமான விஷயம். பும்ராவின் பவுலிங் ஆக்‌ஷன் மிகவும் தனித்துவமானது. பவுன்சர் மற்றும் லெந்த் பால் இரண்டையும் கட்டுக்கோப்பாக வீசுவதில் அவருக்கு நிகர் அவர்தான். இவ்வாறு மேக்ஸ்வெல் கூறினார்.

The post பும்ராவுக்கு நிகர் பும்ராதான்… எதிர்கால வரலாற்றையே மாற்ற கூடியவர் ஜெய்ஸ்வால்: மேக்ஸ்வெல் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: