ஐசிசி தரவரிசை பட்டியல்: டெஸ்ட் பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா நம்பர் 1: பேட்டிங்கில் ஜெய்ஸ்வாலுக்கு 2 ம் இடம்


புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் அள்ளிய இந்தியாவின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் போட்டி பந்து வீச்சு ரேங்கிங்கில் முதலிடத்தை எட்டிப்பிடித்தார்.  ஆஸி சென்றுள்ள இந்திய அணி, பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் பெர்த் நகரில் சமீபத்தில் முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி, ஆஸி அணியை 295 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ஆஸியின் சொந்த மண்ணில் நடந்த அந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161, நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி அவுட்டாகாமல் 100 ரன் எடுத்து அசத்தினர். இருப்பினும் அந்த போட்டிக்கு கேப்டனாக செயல்பட்ட பும்ரா மந்திரப் பந்துகளை வீசி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், 2ம் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை எளிதாக்கினார்.

அந்த போட்டியில், 72 ரன்கள் மட்டுமே தந்து 8 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கான ஐசிசி ரேங்கிங்கில் முதலிடத்துக்கு உயர்ந்துள்ளார். இதன் மூலம், ஆஸ்திரேலியா பவுலர் ஜோஷ் ஹேசல்வுட், தென் ஆப்ரிக்கா பவுலர் காகிஸோ ரபாடா ஆகியோரை பும்ரா பின்னுக்கு தள்ளியுள்ளார். மேலும், தன் பவுலிங் வரலாற்றில் மிக அதிகபட்சமாக 883 புள்ளிகளை பும்ரா தற்போது பெற்றுள்ளார். இதற்கு முன் இந்தியாவை சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் 904 புள்ளிகள், ரவீந்திர ஜடேஜா 899 புள்ளிகள் பெற்றுள்ளனர். நடப்பு ஆண்டில் ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்கில் 3வது முறையாக பும்ரா முதலிடத்தை பெற்றுள்ளார். இந்தாண்டின் பிப்ரவரி மாதம் முதலிடத்தை பெற்ற பும்ரா, ஒரு மாதம் அந்த இடத்தில் நீடித்தார். அதன் பின் அக்டோபரில் மீண்டும் முதலிடத்தை பெற்ற அவர், அடுத்த ஒரு மாதம் அந்த இடத்தை தக்க வைத்தார்.

ஆஸி டெஸ்டில் 161 ரன் குவித்த ஜெய்ஸ்வால், ஐசிசியின் டெஸ்ட் பேட்டிங் தர வரிசைப்படி, 825 புள்ளிகள் பெற்று 2ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார். இது, பேட்டிங் வரலாற்றில் அவர் பெற்ற உச்சபட்ச புள்ளிகள். இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் ஜோ ரூட், 903 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஜெய்ஸ்வாலுக்கு அடுத்ததாக, 804 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் நியுசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் உள்ளார். இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹேரி புரூக், 778 புள்ளிகளுடன் 4ம் இடத்தை பிடித்துள்ளார். ஆஸி டெஸ்டில் 100 ரன் குவித்த கோஹ்லி, 9 இடங்கள் ஏற்றத்துடன், ரேங்கிங்கில் 13வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

The post ஐசிசி தரவரிசை பட்டியல்: டெஸ்ட் பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா நம்பர் 1: பேட்டிங்கில் ஜெய்ஸ்வாலுக்கு 2 ம் இடம் appeared first on Dinakaran.

Related Stories: