போக்குவரத்து நெரிசலால் திணறல் கோபியில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா?

கோபி : கோபியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக புறநகர் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை வலுத்து வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக கோபி விளங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் கோபி நகரம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், கோபி நகர எல்லைகளில் 50க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய பின்னலாடை நிறுவனங்கள், 500க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான உள்ளாடை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது.

இது தவிர திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி,பெருமாநல்லூர்,திருப்பூர் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பின்னலாடை நிறுவனங்களுக்கு கோபி,புதுக்கரைபுதூர்,அத்தாணி,அந்தியூர்,கொளப்பலூர்,பங்களாபுதூர், டி.என்.பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நாள்தோறும் பின்னலாடை நிறுவனங்களுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டதொழிலாளர்கள் சென்று வருகின்றனர். இவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர், பின்னலாடை நிறுவனங்களுக்கு சொந்தமான பேருந்து,வேன் உள்ளிட்ட வாகனங்களில் வேலைக்கு சென்றாலும்,20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோபி பேருந்து நிலையம் சென்று அரசு மற்றும் தனியார் பேருந்து மூலமாகவே வேலைக்கு சென்று வருகின்றனர்.

இதனால் ஒவ்வொரு நாளும் கோபி பேருந்து நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களிலும், இரவு 10 மணி வரையிலும் பயணிகள் எண்ணிக்கை அதிகளவில் இருந்து கொண்டே உள்ளது.

கோபி பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர்,தேனி,மதுரை,திருச்செந்தூர்,திண்டுக்கல்,தாளவாடி,மைசூர், கோவை,சென்னை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கோபி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் போதிய இட வசதி இல்லாத நிலையில் குறிப்பிட்ட பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும் என்ற நிலையில் பெரும்பாலான பேருந்துகள் பேருந்து நிலையம் வந்தவுடன் உடனடியாக புறப்பட்டு செல்ல வேண்டிய நிலையில்,பெரும்பாலான பயணிகள் வெயிலுக்கு காய்ந்தும், மழைக்கு நனைந்தும் பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.

அதே போன்று பண்டிகை காலங்களிலும், திருவிழா காலங்களிலும் கோபி- சத்தி சாலையில் கரட்டூரில் இருந்து சாந்தி திரையரங்கு வரை சுமார் 5 கி.மீ தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது போன்ற நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கி நோயாளிகள் உயிருக்கு போராடும் சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. அதே போன்று பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டாலும், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பேருந்துகளிலேயே பயணித்து வருகின்றனர். இதனால் கோபி பேருந்து நிலையம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கடந்த 15 ஆண்டுக்கு முன்பே புறநகர் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை எழுந்தது. கோபி -திருப்பூர் சாலையில் மொடச்சூரிலும், அதன் பின்னர் வடுகபாளையத்திலும் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.ஆனால் பல்வேறு காரணங்களால் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் அப்போது கைவிடப்பட்டது.

இதுகுறித்து பயணிகள் கூறும் போது, பெரும்பாலான பேருந்துகள் கோபி- திருப்பூர் சாலையிலும், ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் செல்லும் நிலையில், ஒரே பேருந்து நிலையத்திலிருந்து செல்வதால் நகர் பகுதிக்குள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து கோபி வரும் பேருந்துகளை திருப்பூர் சாலையில் புறநகர் பேருந்து நிலையம் அமைத்து அங்கேயே நின்று செல்லும் வகையில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.

ஈரோடு, கோவை, திருப்பூர் போன்ற மாநகரங்களிலும் இரண்டு முதல் 3 பேருந்து நிலையம் வரை உருவாக்கப்பட்டு நகர் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது போன்று கோபியிலும் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்றனர்.இதுகுறித்து நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ் கூறியதாவது:கோபி் நகராட்சி விரிவாக்கம் செய்ய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நகராட்சி விரிவாக்கம் செய்யும் போது,திருப்பூர் சாலையில் உள்ள மொடச்சூர் ஊராட்சியும் நகராட்சியுடன் இணைக்க கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.

நகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டால் திருப்பூர் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்கனவே புறவழிச்சாலை திட்டமும் கொண்டு வர கோரிக்கை விடப்பட்டுள்ளதால்,புறவழிச்சாலை அமைய உள்ள இடத்தின் அருகே புறநகர் பேருந்து நிலையம் அமைக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

The post போக்குவரத்து நெரிசலால் திணறல் கோபியில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: