திருச்செந்தூர்: தீவிர கண்காணிப்பில் உள்ள திருச்செந்தூர் கோயில் தெய்வானை யானையை வனத்துறை மற்றும் கால்நடை துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதையடுத்து யானையை பாகன் குளிப்பாட்டி சோறு வழங்கினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கடந்த 2006ம் ஆண்டு 8 வயதில் குமரன் என்ற ஆண் யானையுடன் வந்த தெய்வானை யானைக்கு தற்போது 26 வயதாகிறது. கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குமரன் யானை உடல் நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து, தெய்வானை யானை மட்டும் ராஜகோபுரம் பகுதியில் உள்ள குடிலில் தங்கியுள்ளது. இங்கு யானை குளிப்பதற்கு ஷவர் வசதி உள்ளது. மேலும் அருகே சரவணப் பொய்கையில் நீச்சல் தொட்டியும் கட்டப்பட்டு உள்ளது. கடந்த 18ம் தேதி மாலை 3 மணியளவில் யானை பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் யானை குடிலில் இருந்தனர்.
அப்போது யானை தாக்கியதில் சிசுபாலன், உதயகுமார் ஆகியோர் படுகாயமடைந்து உயிரிழந்தனர். இதையடுத்து வனத்துறை மற்றும் கால்நடை துறையின் தீவிர கண்காணிப்பில் யானை குடிலில் பாதுகாப்பாக உள்ளது. இந்நிலையில் தெய்வானை யானைக்கு நேற்று காலை கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் செல்வக்குமார், மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலர் மனோகரன் ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது யானை உடல் நலம் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் உன்னிப்பாக கவனித்தனர். யானை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் படிப்படியாக உணவும் சாப்பிட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். பாகன்களிடம் யானையின் செயல்பாடுகளில் ஏதாவது மாறுபாடு உள்ளதா? என்பதையும் கேட்டு தெரிந்து கொண்டனர். அப்போது பாகன்கள் சொன்னதை கேட்டு யானை கால்களை அசைத்தல், திரும்புவது, துதிக்கையை தூக்கிக் காட்டுவது என அனைத்து கட்டளையையும் செய்தது.
மருத்துவர்கள் பரிசோதனையை தொடர்ந்து பாகன்கள் செந்தில்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் யானையை குழாய் மூலம் தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டினர். அதன் பிறகு யானை உண்பதற்கு சோற்றை உருண்டையாக உருட்டிக் கொடுத்தனர். யானை வழக்கம்போல் அதனை சாப்பிட்டது. பக்தர்கள் மற்றும் வெளியாட்கள் யானை குடில் பக்கம் செல்லாதவாறு போலீசார், செக்யூரிட்டிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் 24 மணி நேரமும் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் யானை அருகில் அதிக சத்தம் கேட்காதவாறு பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பொம்மை யானை
திருச்செந்தூர் முருகன் கோயிலில் புகழ்மிக்க யானைகளான புருஷோத்தமன், சாந்தி போன்ற யானைகள் வளர்க்கப்பட்டன. நீண்ட தந்தங்களுடன் ஆஜானுபாகுவான உயரம் கொண்ட புருஷோத்தமன் யானை திரைப்படங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டு 2005ம் ஆண்டு சாந்தி யானை மரணமடைந்த நிலையில், கிட்டத்தட்ட ஓராண்டாக நிரந்தர யானை இன்றி திருச்செந்தூர் கோயில் இருந்தது. திருவிழாக்களில் பொம்மை யானைகள் பயன்படுத்தப்பட்டன. இதையடுத்தே பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று 2006ம் ஆண்டு குமரன், தெய்வானை என இரு யானைகள் கொண்டு வரப்பட்டன.
The post தீவிர கண்காணிப்பில் உள்ள திருச்செந்தூர் கோயில் யானை: பாகன்கள் கட்டளை ஏற்றது appeared first on Dinakaran.