புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கை வரும் டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து புதுக்கோட்டை சார்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ. முன்னாள் அமைச்சரான இவர், புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளராகவும் உள்ளார். அதிமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக ₹35.79 கோடி சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது 2021 அக்டோபர் 17ம் தேதி புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் 216 பக்க குற்றப்பத்திரிக்கை கடந்தாண்டு மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த மாதம் 25ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரணை செய்த அமர்வு நீதிமன்ற நீதிபதி சுபத்ரா தேவி, நவம்பர் 22ம் தேதிக்கு(இன்று) வழக்கை ஒத்திவைத்ததோடு, நிர்வாக காரணங்களுக்காக இந்த வழக்கின் விசாரணை இனி புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடைபெறும் என்று தெரிவித்து, வழக்கை அந்த நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு இன்று புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகவில்லை.
இவர்களது வழக்கறிஞர்களும், லஞ்ச ஒழிப்பு துறையினரும், அரசு தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி கிரிஜா ராணி, விசாரணையை வரும் டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
The post அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு டிச. 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.