சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை சேர்ந்தவர் மாயவன். இவருடைய மனைவி ராசாத்தி (37). மாயவனுக்கு நிலையான வேலை இல்லாததால், மனைவி ராசாத்தியை வெளிநாட்டிற்கு ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு அனுப்ப முடிவு செய்தார். அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்று சில வீடுகளில் ஹவுஸ்கீப்பிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில், ராசாத்திக்கு நுரையீரல் பாதிப்பு சம்பந்தமான நோய் ஏற்பட்டதால் வேலை செய்ய முடியவில்லை. எனவே வேலை வேண்டாம் என்று கூறிவிட்டு, தனது சொந்த ஊர் திரும்புவதற்காக, கோலாலம்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் நேற்று காலை சென்னைக்கு வந்து கொண்டு இருந்தார். இந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ராசாத்திக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விமான பணிப்பெண்கள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, பயணி ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது, மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விமானம் நேற்று காலை 7 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. உடனடியாக மருத்துவ குழுவினர் விமானத்துக்குள் ஏறி, பெண் பயணியை பரிசோதித்தனர். ஆனால் பயணி ராசாத்தி, விமான இருக்கையில் உயிரிழந்த நிலையில் இருந்தார். ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் பயணி, உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து, பயணியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
The post மலேசியாவிலிருந்து சென்னை வந்தபோது நடுவானில் பறந்த விமானத்தில் பெண் பயணி திடீர் மரணம் appeared first on Dinakaran.