×
Saravana Stores

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க ஐகோர்ட் தடை

சென்னை: மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள சிவில் வழக்கில், கடந்த 2004ல் தனது பாட்டியின் மறைவுக்குப் பிறகு மியூசிக் அகாடமி, ஆங்கில நாளிதழுடன் இணைந்து 2005ம் ஆண்டு முதல் அவரது நினைவை போற்றும் வகையில் சங்கீத கலாநிதி எம்.எஸ். சுப்புலட்சுமி விருது என்ற பெயரில் 1 லட்சம் ரூபாய் ரொக்க விருதை வழங்கி வருகிறது.

வரும் டிசம்பரில் 98வது ஆண்டு விழாவில் பாடகர் டி எம் கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களது குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. பாடகர் டி.எம்.கிருஷ்ணா பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் எனது பாட்டி சுப்புலட்சுமிக்கு எதிராக கூறி வரும் கருத்துகள் மலிவான விளம்பரத்துக்காகத்தான். கர்நாடக இசை உலகில் தன் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிய ஒருவர், எப்படிக் கெளரவிக்கப்படுகிறார் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் உயிலின்படி எந்த விதமான விருதும் வழங்க கூடாது. எனவே, இந்த விருதை டிசம்பரில் நடைபெறும் 98வது ஆண்டு விழாவில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவிற்கு பதிலளித்த மியூசிக் அகாடமி, விருது பெறுபவரை தேர்ந்தெடுப்பதில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை.

2005ம் ஆண்டு முதல் ஆங்கில நாளிதழ் குழுமம்தான் விருது வழங்குகிறது. இதற்கு மறைந்த பாடகர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், 2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது. அதே சமயம், அவரது பெயரை பயன்படுத்தாமல் விருதை வழங்கலாம் என்று இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளார்.

The post எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க ஐகோர்ட் தடை appeared first on Dinakaran.

Tags : ICourt ,DM Krishna ,MS Subbulakshmi ,Chennai ,M.S. Subbulakshmi ,Srinivasan ,Madras High Court ,Music Academy ,
× RELATED பேராசிரியர்கள் தாமதமாக வருவதை தடுக்க...