- சென்னை
- ஆபிரகாமபுரம்
- ஏபிஎம்
- சபீர் யூசுப்
- அவென்யூ கிரசண்ட் தெரு
- பாலிஹோஸ் இந்தியா ரப்பர் பிரைவேட் லிமிடெட்
- தின மலர்
சென்னை: சென்னை அபிராமபுரம் ஏ.பி.எம். அவென்யூ கிரசன்ட் தெருவில் தொழிலதிபர் சபீர் யூசப் என்பவர் வசித்து வருகிறார். இவர், பாலிஹோஸ் இந்தியா ரப்பர் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது நிறுவனங்களில் இருந்து கனரக வாகனங்களுக்கான ரப்பர் மற்றும் பைப் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பாலிஹோஸ் நிறுவனத்திற்கு இருங்காட்டுக்கோட்டை சிப்காட், அம்பத்தூர் தொழிற்பேட்டை, வல்லம், மாம்பாக்கம், திருப்போரூர் பகுதிகளில் தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த நிறுவனம் கடந்த ஆண்டு முறையாக வருமான வரி தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், வெளிநாடுகளுக்கு கனரக வாகனங்கள் மற்றும் ராட்சத இயந்திரங்களுக்கான ரப்பர் போன்ற உதிரிபாகங்களை தயாரித்து ஏற்றுமதி செய்ததில் பல கோடி ரூபாய் வரை வரிஏய்ப்பு செய்ததாகவும், வருமான வரித்துறையிடம் கடந்த ஆண்டு முரண்பட்ட கணக்குகளை இந்த நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று காலை பாலிஹோஸ் இந்தியா ரப்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் தொடர்பான தொழிற்சாலைகள், தலைமை அலுவலகம், சென்னை ஆழ்வாப்பேட்டையில் உள்ள உரிமையாளர் சபீர் யூசப் வீட்டில் தனித்தனி குழுக்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர். அதேபோல் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்சாலையில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நிறுவனமான இடால் பிளாஸ்டிக் காம்பவுண்டஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலும் சோதனை நடந்தது.
இந்த நிறுவனம் பாலிஹோஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் எம்.ஆர்.எம். என்ற பெயரில் இயங்கும் கட்டுமான நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் சுஜித் முகர்ஜி வீட்டிலும் சோதனை நடந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான தொழிற்சாலைகள், அலுவலகங்கள், உரிமையாளர்கள் வீடு என மொத்தம் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை சோதனை நீடித்தது.
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து கடந்த 2 ஆண்டுகளாக வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களை வைத்து, மொத்த வருவாய் மற்றும் லாபம் தொடர்பான கணக்கு வழக்குகள், வங்கி கணக்கு விவரங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனை முடிவில்தான் இந்த நிறுவனங்கள் எத்தனை கோடி ஒன்றிய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர் என தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக புகார் சென்னையில் ரப்பர், பிளாஸ்டிக், கட்டுமான நிறுவனங்களில் அதிரடி ஐடி ரெய்டு: பல கோடி ரொக்கம், முக்கிய ஆவணங்கள் சிக்கின appeared first on Dinakaran.