×
Saravana Stores

வாடகை பாக்கி ரூ.25 லட்சத்தை கோயிலுக்கு செலுத்த வேண்டும்: அவ்வை இல்லத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயிலுக்கு சொந்தமான நிலத்திற்கான வாடகை பாக்கி ரூ.25 லட்சத்தை செலுத்துமாறு அடையாறு அவ்வை இல்லத்தின் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடையாறில் கடந்த 1930ல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலம் அவ்வை இல்லம் உருவாக்கப்பட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம், பள்ளிகள் உள்ளிட்டவை ஆரம்பிக்கப்பட்டன. இந்த அவ்வை இல்லம் உள்ள நிலம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் தேவஸ்தானத்திற்கு சொந்தமானது. இந்த நிலத்தை அவ்வை இல்லம் அமைப்பதற்காக 50 ஆண்டுகளுக்கு கடந்த 1936ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி குத்தகை காலம் முடிந்தவுடன் குத்தகை காலத்தை நீட்டிக்குமாறு அவ்வை இல்லம் அறக்கட்டளை சார்பில் அறநிலையத்துறையிடம் கோரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில், நிலத்திற்கான வாடகை பாக்கி தொகையாக ரூ.6 கோடியே 58 லட்சத்து 69,381 தருமாறு கேட்டு அறக்கட்டளைக்கு அறநிலையத்துறை 2013ல் கடிதம் எழுதியது. பின்னர் ரூ.8 கோடியே 17 லட்சத்து 19,661 வாடகை பாக்கி தொகை தருமாறு 2015 ஜூன் மாதம் மீண்டும் கடிதம் எழுதப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘மனுதாரர் ஏழை எளிய மக்களுக்கான அறக்கட்டளை நடத்தி வருகிறார். எனவே, இந்த விஷயத்தில் தகராறு கூடாது. குழந்தைகளுக்கு படிப்பு தரவேண்டும் என்று முன்னாள் முதல்வர் காமராஜரின் கனவை அறக்கட்டளை நனவாக்கிவருகிறது. அதை வரவேற்க வேண்டும். லாப நோக்கமில்லாமல் இந்த அறக்கட்டளை நடத்தப்பட்டு வருகிறது. மனுதாரர் அறநிலையத்துறைக்கு 48,888 மற்றும் 95,732 சதுர அடி நிலத்தை திரும்ப தர தயாராக உள்ளார். மனுதாரர் அறக்கட்டளை மொத்தம் ரூ.28 கோடி 3 லட்சத்து 61 பாக்கி தொகை உள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது மனுதாரர் அறக்கட்டளை ரூ.20 லட்சத்தை பாக்கி தொகையாக தருவதாக தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டதற்கு பிறகு, பணத்தின் அடிப்படையில் இந்த வழக்கை பார்க்காமல் எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த நீதிமன்றம் பார்க்கிறது.

எனவே, மனுதாரர் அறக்கட்டளை கோயிலுக்கு மொத்த செட்டில்மெண்டாக பாக்கி தொகை ரூ.25 லட்சத்தை தரவேண்டும். ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் வாடகை என்ற வகையில் 2025 ஜூன் வரை தரவேண்டும். மனுதாரர் அறக்கட்டளை திரும்ப தருவதாக கூறிய நிலத்தை 2025 ஜூன் 1ம் தேதிக்குள் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கவேண்டும். அவ்வை இல்லம் உள்ள புது கட்டிடத்தில் பள்ளிகளை நடத்த வேண்டும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி வசித்த இல்லத்தை மனுதாரர் அறக்கட்டளை மற்றும் அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் சேர்ந்து பராமரிக்க வேண்டும். வாடகை பாக்கி தொகையை கொடுத்தவுடன் இந்த நிலம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் அறநிலையத்துறை வாபஸ் பெற வேண்டும். கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதை அறநிலையத்துறை சட்டப்படி அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

The post வாடகை பாக்கி ரூ.25 லட்சத்தை கோயிலுக்கு செலுத்த வேண்டும்: அவ்வை இல்லத்திற்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rent ,Paki ,Chennai ,Chennai High Court ,Dr. ,Muthulakshmi Redtial Foundation ,Adhyar ,
× RELATED ஓ.பி.எஸ். மீதான வழக்கு; விரைந்து குற்ற...