×
Saravana Stores

புகழ யாரும் இல்லாத விரக்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

சென்னை: தன்னை புகழ, பாராட்ட யாரும் இல்லையே என்ற விரக்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து வெளியிட்ட அறிக்கை: அரசுத்திட்டங்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரை ஏன் வைக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டிருந்தார். அதற்கான பதிலை இன்று(நேற்று) நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் நான் கூறியிருந்தேன். அதிலும் சமாதானம் அடையாத எதிர்க்கட்சித் தலைவர், ஏதேதோ கேள்விகளை மீண்டும் அடுக்கியுள்ளார்.

94 வயது வரை தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்த கலைஞரின், பெயரை அரசுத் திட்டங்களுக்கு சூட்டுவதில் என்ன தவறு இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில், அரசுத்திட்டங்களுக்கு அம்மா என்று பெயர்களை சூட்டியது யார்? நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞர் அவர்களின் பெயரை அரசுத் திட்டங்களுக்குச் சூட்டுவதும், சிலைகள் எழுப்புவதும் அவருக்கு நாம் செலுத்துகிற நன்றியின் வெளிப்பாடு. நன்றி என்றால் என்னவென்றே தெரியாத எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு இது புரியாது.

அடுத்தது, அப்பா, மகனை பாராட்டுகிறார்; மகன், அப்பாவை புகழ்கிறார் என்று அவர் வேதனைப்படுகிறார். அமைச்சர்கள் நாங்கள் மட்டுமல்ல, நம்முடைய திராவிட மாடல் அரசையும், முதலமைச்சரையும் இன்றைக்கு உலகமே புகழ்கிறது. நம் முதலமைச்சர் என்னை மட்டுமல்ல, எந்தத் துறையின் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், அந்தத்துறையின் அமைச்சரின் செயல்பாட்டினை பாராட்டி ஊக்கப்படுத்தி வருகிறார். தன்னை புகழ யாருமே இல்லையே என்ற விரக்தியும், தான் பாராட்ட அ.தி.மு.க.வில் ஆளேதும் இல்லையே என்ற ஏமாற்றமுமே எதிர்க்கட்சித்தலைவரின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.

‘நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான்’ என்று என்னை விமர்சனம் செய்திருக்கிறார். ஊர்ந்து போய் பதவி பிடித்த சில கரப்பான் பூச்சிகளுக்கும், விஷ ஜந்துகளுக்கும், என்றைக்கும் நாங்கள் விஷக்காளான்கள் தான். சமூக நீதிக்கொள்கையால் பண்படுத்தப்பட்டு, திராவிட இயக்கத் தலைவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட பயிர்கள் நாங்கள். எங்களைப் பார்த்தால், ஆரியத்தின் அடிவருடிகளுக்கும், அகற்றி வீசப்பட்ட களைகளுக்கும் ஆத்திரம் வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, நீங்கள் படித்து முடித்து வீட்டில் பத்திரமாக வைத்துள்ள புத்தகங்களின் பட்டியலை எப்போது சொல்வீர்கள். நீங்கள் சொன்ன அந்த ‘சேக்கிழ’ ராமாயணத்தை எப்போது தருவீர்கள். உங்கள் கட்சிப் பெயரில் உள்ள ‘திராவிடம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறிய அறிஞர்களை கண்டுபிடித்துவிட்டீர்களா. இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு எங்களை விமர்சிக்க வாருங்கள். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

The post புகழ யாரும் இல்லாத விரக்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Udhayanidhi Stalin ,Muthamizharyna ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமியுடன் நேரடி...