×
Saravana Stores

வடசென்னையில் உள்ள 35 குளங்களை சீரமைக்க மாநகராட்சி திட்டம்

சென்னை: வடகிழக்கு பருவமழையின் போது சென்னையில் பல பகுதிகளில் அதிகளவு பாதிப்பு ஏற்படுகின்றது. தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீர் வடிவதற்கு அதிக நாட்களாவதால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இதனை தடுக்கும் விதமாக, சென்னை மாநகராட்சி சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீரை சேகரிக்கும் வகையிலும், நீா்நிலைகளை மேம்படுத்தும் வகையிலும், மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள், குளங்கள் மற்றும் நீா்நிலைகளைப் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள 59 குளங்கள் அதன் முழுக் கொள்ளளவை எட்டின. இதில், திருவொற்றியூர் தாமரைக்குளம், மாதவரத்தில் உள்ள முள்ளகுளம், செல்லக்குளம், அம்பத்தூரில் உள்ள வைரக்குளம், சிவாவிஷ்ணு குளம், தாங்கல் குளம், அண்ணா நகரில் உள்ள பரசுராமர் கோயில் குளம், காசி விஸ்வநாதர் கோயில் குளம், தேனாம்பேட்டையில் உள்ள அகத்தீஸ்வரர் கோயில் குளம், கோடம்பாக்கத்தில் உள்ள பாஸ்கர் காலனி குளம், அடையாறில் உள்ள மருதீஸ்வரர் கோயில் குளம், பெருங்குடியில் உள்ள ஊத்துக் குளம், வண்ணான் குளம், ஜல்லடியன்பேட்டை குளம், சோழிங்கநல்லூரில் உள்ள வண்ணகேணி மற்றும் தட்சன்கேணி குளம், புறா குளம், புல்லாகேணி குளம் உள்ளிட்ட 59 குளங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

மழைக்கு முன்பாக குளங்களில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகள் காரணமாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டது, மேலும்,குறிப்பிட்ட பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மேலும் வடசென்னையில் உள்ள 35 குளங்களை சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம் ஆகிய இடங்களில் உள்ள 35 குளங்களை சென்னை மாநகராட்சி புனரமைத்து மழை வெள்ளத்தைத் தடுக்கவும், நீர் சேமிப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சடையங்குப்பம், மணலியில் உள்ள கார்கில் நகர், மாதவரத்தில் உள்ள வடபெரும்பாக்கம் போன்ற இந்தப் பகுதிகளில் உள்ள பல சுற்றுவட்டாரங்கள், ஒவ்வொரு மழைக்காலத்திலும் இடுப்பு மட்டம் வரை தண்ணீருடன் கடுமையான வெள்ளத்தை எதிர்கொள்கின்றன. இதனை கருத்தில் கொண்டு ஒட்டுமொத்தமாக, இந்த 35 குளங்களும் 20 அடி ஆழப்படுத்தப்பட்டு, குறைந்தபட்சம் 50 மில்லியன் லிட்டர் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் படவேட்டம்மன் கோயில் குளத்தில் நடைபாதை வசதிகள் மற்றும் மாதவரத்தில் 139 ஏக்கர் ஏரியை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றுவது ஆகியவை அடங்கும். இதேபோல், மாதவரத்தில் ₹4 கோடி செலவிலும், 400 ஏக்கர் பரப்பளவுள்ள ரெட்டேரி ஏரி ₹43 கோடி செலவிலும் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகள், டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

 

The post வடசென்னையில் உள்ள 35 குளங்களை சீரமைக்க மாநகராட்சி திட்டம் appeared first on Dinakaran.

Tags : North Chennai ,Chennai ,Municipality ,Dinakaran ,
× RELATED வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்...