×
Saravana Stores

சமூக வலைதளங்கள் மூலம் போதைப்பொருள் விற்பனை; டார்க் வெப்சைட் மாய உலகில் சிக்கி தவிக்கும் இளைஞர்கள்: போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ஐடி ஊழியர்கள், இன்ஜினியர்கள் கைது

பெரம்பூர்: ஒரு காலகட்டத்தில் போதை பொருட்களை பயன்படுத்துபவர்களை குற்றம் செய்தவர்கள் எனக்கருதி அவர்களை ஒதுக்கி வைத்தார்கள். சாராயக் கடைகளும் கள்ளுக் கடைகளும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தன. குடிப்பவர்கள் ஊருக்கு வெளியே சென்று குடித்துவிட்டு பலருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வந்து விடுவார்கள். அந்த அளவிற்கு போதை என்ற ஒரு கலாச்சாரம் திரை மறைவில் இருந்தது. ஆனால் இன்று கல்யாணம் தொடங்கி கருமாதி வரை அனைத்திலும் போதை என்ற ஒன்று கலந்து விட்டது. எதற்கெடுத்தாலும் பார்ட்டி என்ற ஒரு கலாச்சாரம் இளைய தலைமுறையினரிடையே அதிகரிக்க தொடங்கி விட்டது. முதலில் பீர், அதன் பிறகு சரக்கு என தொடங்கி, அதோடு நிறுத்திக் கொள்ளாமல் தற்போது அடுத்தடுத்த செயல்களில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே செல்கின்றனர். எதை சாப்பிட்டால் வாசனை வராது, எதை சாப்பிட்டால் போலீசாரிடம் சிக்க மாட்டோம், எதை சாப்பிட்டால் அதிக நேரம் போதை இருக்கும் என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து அதற்கு ஏற்ற வகையில் போதை வஸ்துக்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். நல்ல விஷயங்களை தேடிச்சென்று கேட்டாலும் கிடைப்பதில்லை என்று கூறும் இதே நாட்டில், கெட்ட விஷயங்கள் நம்மை தேடி எளிதாக கிடைக்கின்றன. அந்த வகையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தற்போது மிக எளிதாக கிடைக்கின்றன. இதற்கு செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்கள் பயன்பாடும் முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. எவ்வளவு பேரை தான் காவல்துறையினர் பாலோ செய்ய முடியும் என கேள்வி கேட்கும் அளவிற்கு தவறு செய்பவர்கள் எண்ணிக்கையும், போதை பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

குறிப்பிட்ட இளைஞர்கள் மது போதைக்கு அடிமையாகி ஒரு குறிப்பிட்ட அளவில் அதை நிறுத்தி விடுகின்றனர். சிலர் கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதைத் தாண்டி வேறொரு உலகம் உள்ளது. பெரும்பாலும் மது, கஞ்சா போன்றவற்றை பயன்படுத்துபவர்கள் இந்த உலகத்திற்கு வருவதில்லை. ஒரு மனிதன் எவ்வளவுதான் குடித்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அவனால் மதுவை குடிக்க முடியாது. கீழே விழுந்து விடுவான். இதே போலத்தான் கஞ்சாவும், ஓரளவுக்கு மேல் எடுத்துக் கொண்டால் அவர்கள் தன்னை மறந்து மயக்க நிலைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் சில போதைப் பொருட்களை தற்போது இளைய தலைமுறையினர் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் போதையாவது கிடையாது, மாறாக எப்போதும் ஹேப்பி மூடு எனப்படும் சந்தோஷத்தில் மிதக்கின்றனர். இது ஒரு விதமான எனர்ஜி என அவர்களது பாஷையில் கூறுகின்றனர். அந்த வகையில் சமீப காலமாகவே குறிப்பிட்ட போதை பொருட்களை போலீசார் தீவிரமாக வேட்டையாடி வருகின்றனர். ‌சமூக வலைதளங்களில் ஆதிக்கம் மற்றும் பல்வேறு அபரிவிதமான வளர்ச்சியால் நாட்டில் போதைப்பொருட்களின் நடமாட்டம் மற்றும் அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொடர்ந்து காவல்துறையினர்களுக்கு பல்வேறு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து குறிப்பிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மற்றும் அதனை விற்பவர்களை கைது செய்ய தனியாக ஒரு பிரிவு தொடங்கப்பட்டு தற்போது அந்த பிரிவு மூலமாக பல விஷயங்கள் வெளியே வர ஆரம்பித்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற அருண் மூலம் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உருவாக்கப்பட்டு சென்னையில் பல்வேறு போதைப் பொருட்கள் தொடர்ந்து பிடிபட்டு வருகின்றன.

இன்ஜினியர்கள், கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் என பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மெத்தபெட்டமைன், எம்டிஎம்ஏ போதை மாத்திரை, ஓஜி கஞ்சா, எல்எஸ்டி ஸ்டாம்ப் போன்ற போதைப் பொருட்கள் தொடர்ந்து பிடிபட்டு வருகின்றன. முன்பெல்லாம் குறிப்பிட்ட போதை பொருட்கள் பிடிபட்டால் அந்த நபர்களை கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்யும் போலீசார், அதன் பிறகு அந்த வழக்குகளைப் பற்றி பெரிதாக பின் தொடர மாட்டார்கள். காரணம் வேலைப்பளு மற்றும் பல்வேறு காரணங்கள் இருந்தன. ஆனால் தற்போது ஒவ்வொரு போதை பொருட்களுக்கு பின்னால் யார் உள்ளார்கள் என்பதை முழுவதுமாக ஆராய்ந்து குறிப்பிட்ட அந்த நபர்களையும் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு முறையும் போதை பொருட்கள் பிடிபடும்போது செயின் லிங்க் போன்று பல்வேறு நபர்கள் தொடர்ந்து அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கொடுங்கையூரில் கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கிட்டத்தட்ட 15 பேர் வரை போலீசார் கைது செய்தனர். இதேபோல கொடுங்கையூரில் வீட்டிலேயே மெத்தபெட்டமைன் தயாரித்த வழக்கிலும் அடுத்தடுத்து போலீசார் 8 பேரை கைது செய்தனர். இதில் கஞ்சா, ஓஜி கஞ்சா எனப்படும் உயர்ரக கஞ்சா உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் அயனாவரம் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மெத் எனப்படும் மெத்தபெட்டமைன் போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மற்றும் அதனை விற்பனை செய்தவர்களை அடுத்தடுத்து கைது செய்து வந்தனர். மேலும் கிரண்டர் எனப்படும் செயலியை பயன்படுத்தி மெத்தபெட்டமைன் வாங்கி விற்பனை செய்த நபர்களை பெங்களூருவில் வைத்து அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் கேம்ரான் நாட்டைச் சேர்ந்த ஜோன்தான் என்பவரை மிகவும் சிரமப்பட்டு பிடித்த போலீசார் அவர் மெத்தபெட்டமைன் தயாரித்து அதனை சென்னையில் விற்று வந்ததையும் கண்டுபிடித்தனர். இவ்வாறு போலீசாரின் அடுத்தடுத்த அதிரடியால் சென்னையில் போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் தொடர்ந்து சிக்கி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், மதுபானம், கஞ்சா போன்ற பொருட்களை பதுக்கி விற்பனை செய்யும்போதும், அதனைக் கொண்டு செல்லும்போதும் எளிதில் சிக்கி விடுவார்கள். ஆனால் மெத்தபெட்டமைன், ஸ்டாம்ப் மாத்திரை போன்ற போதைப்பொருட்களை கொண்டு செல்வது மிகவும் எளிதாக உள்ளது. ஏதாவது ஒரு லக்கேஜில் வைத்து 100 கிராம் 200 கிராம் என கொண்டு செல்கின்றனர். அதனை கண்டுபிடிப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். இதனால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போதை பொருட்களை சர்வ சாதாரணமாக செல்கின்றனர். ஆனால் அதையும் நோட்டம் பிடித்து தொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சமூகத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் மது, கஞ்சா போன்ற பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஓரளவிற்கு வசதி படைத்தவர்கள் அல்லது மிகவும் வசதி படைத்தவர்கள் மிகவும் விலை உயர்ந்த போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். பிரவுன் சுகர், ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் மிகவும் விலை அதிகம் என்பதால் இதற்கு அடுத்தபடியாக உள்ள மெத்தபெட்டமைன், ஸ்டாம்ப் மற்றும் எம்டிஎம்ஏ எனும் போதை மாத்திரை உள்ளிட்ட பொருட்களை தற்போது சிலர் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஐடி ஊழியர்கள் சிலர் மெத்தபெட்டமைன் பயன்படுத்துவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மெத்தபெட்டமைன் பயன்படுத்திய ஒரு ஐடி ஊழியரை கைது செய்தபோது அவர் கூறிய தகவல்கள் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலும் இரவு பணியில் உள்ள ஐடி ஊழியர்கள் சிலர் மெத்தபெட்டமைனை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் தாங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாகவும், இரவு நேரங்களில் வேலை செய்வதற்கு எங்களுக்கு இது ஊக்க மருந்தாக பயன்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

₹3000 மதிப்புள்ள ஒரு கிராம் போதைப் பொருளை வாங்கி மூன்று பேர் அல்லது நான்கு பேர் பயன்படுத்துவதும் தெரிய வந்தது. பெரும்பாலும் ஐடி ஊழியர்கள் அதிகம் உள்ள பெங்களூரு பகுதியில் இந்த கலாச்சாரம் அதிகரித்துள்ளது. தற்போது சென்னையிலும் இது அதிகமாக பரவி வருகிறது. பெங்களூருவில் இருந்து மெத் மற்றும் சில போதை பொருட்கள் சாலை மார்கமாக சென்னை உள்ளிட்ட சில இடங்களுக்கு வருவதையும் கண்டறிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பலரை கைது செய்துள்ளோம். மேலும் இங்குள்ள பலரும் டார்க் எனப்படும் செயலி மூலமாக போதைப் பொருட்களை வாங்குவது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட அந்த செயலியில் பணம் கொடுத்து போதைப் பொருட்களை வாங்க முடியாது என்பதால் கிரிப்டோ கரன்சி, பிட்காயின் போன்றவை மூலமாக போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பல வியாபாரங்கள் இந்த டார்க் செயலியில் நடக்கிறது. தொடர்ந்து போலீசார் குறிப்பிட்ட செயலிகளையும் கண்காணித்து வருகின்றனர். விளைவு தெரியாமல் பல தவறான செயலிகளில் சென்று இளைஞர்கள் மாட்டிக் கொள்கின்றனர். மேலும் குறிப்பிட்ட இதுபோன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வாங்கி அல்லது பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் காவல்துறையில் சிக்கிக் கொண்டால் அவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என்பதை மறந்து இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் என்ஜினியர்கள், ஐடி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் என படித்த பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் வழக்கில் சிக்குபவர்கள் சாதாரண வழக்குகளைப்போல் வெளியே வந்து விட முடியாது. ஒவ்வொரு வழக்கிலும் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு ஏற்ற வகையில் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும். எனவே இளைஞர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொண்டு போதை பொருட்களை பயன்படுத்தி விபரீத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.

 

The post சமூக வலைதளங்கள் மூலம் போதைப்பொருள் விற்பனை; டார்க் வெப்சைட் மாய உலகில் சிக்கி தவிக்கும் இளைஞர்கள்: போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ஐடி ஊழியர்கள், இன்ஜினியர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Dinakaran ,
× RELATED கள்ளக்காதல் குறித்து மனைவியிடம்...