சென்னை: கேளம்பாக்க பேருந்து நிலையத்தில் தூங்கி கொண்டிருந்தவர் மீது, மாநகர பேருந்து ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பிராட்வேயில் இருந்து கேளம்பாக்கம் வரை இயக்கப்படும் மாநகர பேருந்து நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் கேளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தது அங்கு பேருந்து நிலையத்தில் உள்ளே ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவதற்காக பேருந்தில் ஓட்டுநர் வீரைய்யா பேருந்தை இயக்கினார். அப்போது, நடைபாதையின் கீழே ஓரமாக தூங்கிக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் மீது பேருந்து பின் சக்கரம் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. இதையடுத்து, பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த நபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
The post பஸ்சை ரிவர்சில் எடுத்த போது பேருந்து நிலையத்தில் தூங்கிய முதியவர் உடல் நசுங்கி பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.