ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நீர் ஆதாரமாகவும், ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு வீடுகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கிய இந்த ஏரியில், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்தது. மேலும், ஏரியை சுற்றியுள்ள குடியிருப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலப்பதாகவும், பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் குப்பை கழிவுகள் ஏரி பகுதிகளில் கொட்டப்படுவதாகவும், இதனால் ஏரி நீர் மாசடைவதுடன்ல பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, ஏரியில் கழிவு நீர் கலப்பதாக புகார் எழுந்ததால், அதில் இருந்து பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தி நாளிதழ்களில் வெளியான நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னையில் உள்ள தென் மண்டல அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் நீரின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியங்களுக்கு அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டுள்ளனர். அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆய்வறிக்கையில் மாடம்பாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், 5 இடங்களில் ஏரியில் கலக்கிறது.
இந்த கழிவுநீர் தொழிற்சாலை கழிவுநீர் இல்லை. டிடிஎஸ் அளவு ஒரு லிட்டரில் 2 ஆயிரம் மி.கி வரை (அனுமதிக்கப்பட்ட அளவு 500 மி.கி.) உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த ஏரியை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் தாக்கல் செய்த பரிந்துரையில், ஏரியின் கரையை பலப்படுத்த வேண்டும், மனித நடமாட்டத்தை தடுக்கும் வகையில் வேலி அமைக்க வேண்டும், மாடம்பாக்கம் பகுதியில் கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், தாம்பரம் மாநகராட்சி பகுதியிலிருந்து ஏரிக்கு வரும் கால்வாய்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட மிதக்கும் கழிவுகளைத் தடுக்கும் அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் விஜய் குல்கர்னி ஆகியோர் முன்னிலையில் கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், மாடம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் விடுவது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தாம்பரம் மாநகராட்சி ஆணையரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆணையர் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.
மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழங்கிய பரிந்துரைகளின்படி எடுக்க உள்ள நடவடிக்கை குறித்த செயல்திட்டம் தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கின் அடுத்த விசாரணை அன்று செயல்திட்டத்தை தாக்கல் செய்யாவிட்டால் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். அதன் பிறகும் நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டால் மாநகராட்சி ஆணையருக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்க நேரிடும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் மாதம் 20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என உத்தரவில் கூறப்பட்டது.
இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் கூறுகையில், ‘‘மாடம்பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பதாக புகார் எழுந்து நாளிலிருந்து ஏரியிலிருந்து தண்ணீர் சப்ளை செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டது. முதலில் ஏரியில் கழிவு நீர் கலக்கின்றதா என்பதை தெரிந்துகொள்ள அதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஏரியில் கழிவு நீர் கலக்கின்றதா என்பதை ஆய்வு செய்த பின்னர், அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம்.
அதுமட்டுமின்றி ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஏரியில் உள்ள கிணற்றின் உயரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஆய்வுக்குழுவின் முழுமையான அறிக்கை கிடைத்த பின்னரே உண்மைத் தன்மை தெரிய வரும். எனவே பொதுமக்கள் ஏரியில் கழிவுநீர் கலந்திருப்பதாக நினைத்து அச்சப்பட தேவையில்லை,’’ என்றார்.
The post பசுமை தீர்ப்பாய உத்தரவு எதிரொலியாக மாடம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலக்கிறதா என கண்டறிய குழு: தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.