இதனால், நகராட்சி மற்றும் நகராட்சியின் அருகில் உள்ள இரு ஊராட்சிகளின் பொதுமக்களின் வசிப்பிட பரப்பளவு நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. இந்நிலையில், தாராபுரம் நகராட்சி பகுதியில் பொதுமக்கள் உபயோகித்து வீசும் குப்பைகள் நாளொன்றுக்கு 35 டன் என்ற நிலையிலிருந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இவற்றை பராமரிக்க சுமார் 75 நகராட்சி துப்புரவு பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் சார்ந்த 140 பேர் இணைந்து நகரை தூய்மைப்படுத்தும் முன்களப்பணியாளர்களாக பணியாற்றி வரும் நிலையில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சி குப்பை கிடங்குக்கு அனுப்பப்பட்டு தரம் பிரித்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளாக வகை மாற்றம் செய்யப்பட்ட இவற்றை உரமாகவும், பிளாஸ்டிக் குப்பைகளை சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது .
ஆனால் நகராட்சிக்கு இணையாக கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் புதிதாக வீடு கட்டி குடியேறும் பொதுமக்கள் கட்டுமான பொருட்களின் கழிவுகளையும், தினசரி அவர்கள் உபயோகித்து வீசி எரியும் உணவு கழிவுகளையும் நகராட்சி மற்றும் ஊராட்சி எல்லை பகுதிகளில் உள்ள பொள்ளாச்சி சாலை மற்றும் புதிய வீட்டு வசதி வாரிய சாலை பகுதிகளில் கொண்டு வந்து வீசி எறிந்து விட்டு சென்று விடுகின்றனர்.
இவர்களை தவிர இப்பகுதியில் ஹோட்டல்களில், மதுபான பார்களில் சேரும் குப்பைகள், இவற்றுடன் சில மருத்துவமனை கழிவுகள், இவற்றைத் தவிர தாராபுரம் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள பிராய்லர் சிக்கன் மற்றும் இறைச்சி கடைகளின் குப்பைகள் அனைத்தும் நகராட்சி- ஊராட்சி இணையும் எல்லையான திருச்சி,கரூர் முதல் கேரள மாநிலம் கொச்சின் வரை செல்லும் ஒரே சாலையான பொள்ளாச்சி சாலையில் இரவோடு இரவாக மர்ம நபர்கள் கொண்டு வந்து கொட்டி விட்டு சென்று விடுகின்றனர்.
இந்நிலையில் சமூக நலனை உதாசீனப்படுத்தும் சிலரது இச்செயலால் புறநகர் பகுதிகளில் குடியிருப்போர் பலரும் பொள்ளாச்சி சாலை வழியாக பயணம் மேற்கொள்ளும் பயணிகளும் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசும் குப்பை கிடங்காக மாறி வரும் இந்த ஒரு கிமீ தூரத்தை கடந்து செல்வதற்குள் மூச்சை அடக்கி பிடித்தவாறு வேகமாக கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இன்னும் சில நேரங்களில் மலை போல இங்கு கொட்டப்படும் மாமிச கழிவுகளை நகராட்சி நிர்வாகம் அள்ளிச்செல்வதா அல்லது கவுண்டச்சி புதூர் ஊராட்சி நிர்வாகம் எடுத்துச் செல்வதா, என புரியாத எல்லை பிரச்சனை காரணமாக குப்பைகளுக்கு தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதிலிருந்து, எழும் துர்நாற்றத்துடன் கூடிய கரும்புகையால் அப்பகுதியில் குடியிருப்போருக்கும், வழியாக செல்வோருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டும், எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாமல் புகை மூட்டம் ஏற்படுவதால் விபத்துகளும், அதனால் உயிரிழப்புகளும், உடல் ஊனமும் ஏற்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
ஒட்டுமொத்த இப்பிரச்னைக்கும் ஒரே தீர்வாக காண வேண்டுமென்றால் தாராபுரம் நகராட்சிக்கு இணையான வருவாய் உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சியையும், அரசு கலைக்கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகள், அரசு தொழில்பயிற்சி நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்டவைகள் இருக்கும் நஞ்சியம்பாளையம் ஊராட்சியையும், நகராட்சியுடன் இணைக்க அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பலர் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நகராட்சியை விரிவாக்கப்படுத்தும் அரசின் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த ராஜாமணி மற்றும் மகேஸ்வரி ஆகியோர் கூறியிருப்பதாவது:
தாராபுரம் நகராட்சி பகுதி விவசாயத்தை பின்புலமாக கொண்ட வளர்ந்து வரும் நகரமாக மாறி வருகிறது. நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் நகராட்சி நிர்வாகம் அதிக முயற்சியை எடுக்க வேண்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக தாராபுரம் நஞ்சியம்பாளையம் ஊராட்சி பகுதியில் அரசு கலைக்கல்லூரியை இந்த அரசு கொண்டு வந்துள்ளது. அதேபோல் பத்திரப்பதிவுத்துறை அலுவலகமும் கட்டப்பட்டு வருகிறது. அரசு தொழில் பயிற்சி நிலையமும் கடந்த 60 ஆண்டுகள் கடந்து இங்கு செயல்பட்டு வருகிறது.
இதேபோல், தாராபுரம் நகராட்சியை விட பரப்பளவிலும் வருவாயிலும் முன்னிலை வகிப்பது கவுண்டச்சிபுதூர் ஊராட்சி தான் என்பது மிகையல்ல. ஏனென்றால் இப்பகுதியில் நகரை விட்டு நெரிசல் இல்லாத பகுதியில் குடியிருக்க விரும்பும் அரசு ஊழியர்கள் வணிகர்கள் பொதுமக்கள் அனைவரும் புறநகர் பகுதியான கவுண்டச்சி ஊராட்சி பகுதிகளுக்குள் ஏராளமான வீட்டு மனைகளை வாங்கி வீடுகளை கட்டி குடியேறி வருகின்றனர். இதனால் ஊராட்சிக்கு கணிசமான வருவாய் வந்து கொண்டுள்ளது.
மேலும் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி பகுதியில் தான் அரிசி ஆலைகள், நூல் மில்கள், புறநகர் பகுதிகள் விரிவடைந்து வருகின்றன. எனவே தாராபுரம் நகராட்சியை விரிவுப்படுத்தும் முயற்சியில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சி இவை இரண்டையும் நகராட்சியுடன் இணைத்தால் நூற்றாண்டுகள் பழமையான தாராபுரம் நகரம் விரிவடைந்த நகரமாக முன்னேறுவதற்கு வாய்ப்பாக அமைவதுடன் நகராட்சியாக மாற்றப்படும் போது நகராட்சி தூய்மையாக வைத்துக் கொள்ள அதிக துப்புரவு பணியாளர்களையும் பணியமர்த்துவதன் மூலம் எங்குமே குப்பை குவியல் இல்லாதவாறு தூய்மையான நகராக வைத்துக் கொள்ள பெரும் வாய்ப்பாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
The post நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டப்படும் கழிவுகளால் குப்பை கிடங்காக மாறி வரும் தாராபுரம் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.