தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை நவ.29 வரை சிறையில் அடைக்க ஆணை

சென்னை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை நவ.29 வரை சிறையில் அடைக்க ஆணையிடப்பட்டுள்ளது. சென்னை அழைத்து வரப்பட்ட நடிகை கஸ்தூரி, எழும்பூர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் ரகுபதி ராஜா முன்னிலையில் கஸ்தூரி ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற காவலை அடுத்து, புழல் சிறையில் கஸ்தூரி அடைக்கப்படுவார்.

தெலுங்கு பேசும் மக்கள் மற்றும் பெண்களை குறித்து நடிகை கஸ்தூரியின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இது தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தெலுங்கு மக்கள் தமிழ்நாடு முழுவதும் இழிவாக பேசிய நடிகை கஸ்தூரி மீது புகார் அளித்து வருகின்றனர்.

அதேநேரம் பல்வேறு தரப்பினரும் கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய தெலுகு சம்மேளனம் மற்றும் தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் தலைவர் வீரலட்சுமியும் புகார் அளித்தனர். மேலும், கோயம்பேடு காவல் நிலையத்திலும் தெலுங்கு அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

நடிகை கஸ்தூரி மீது புகார்கள் குவிந்ததால் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் கடந்த வாரம் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 192, 196(1),(ஏ), 353(1)(பி) மற்றும் 353(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரிடம் விளக்கம் ேகட்டு விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பினர்.

ஆனால் போலீசாரின் கைதுக்கு பயந்து நடிகை கஸ்தூரி தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார். அதேநேரம் மதுரை திருப்பரங்குன்றம் காவல் நியைத்தில் அளித்த புகாரின் படி நடிகை கஸ்தூரி மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல் கோவை மாநகர காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் மீதும் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே நடிகை கஸ்தூரி எந்த நேரத்திலும் போலீசார் கைது செய்யலாம் என அச்சத்தில் நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதைதொடர்ந்து நடிகை கஸ்தூரியை கைது செய்ய சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கடந்த ஒருவாரமாக தீவிர தேடுதல் வேட்டையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பஞ்சகுட்டா என்ற இடத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டை பதுங்கி இருப்பது தனிப்படையினருக்கு உறுதியான தகவல் கிடைத்தது.

அதன்படி தனிப்படையினர் நேற்று இரவு தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன் பண்ணை வீடு முழுவதும் தேடியும் நடிகை கஸ்தூரி காணவில்லை. இதனால் அவர் போலீசார் வருவதை அறிந்து அவர் தப்பி ஓடிவிட்டாரோ என்று தனிப்படையினர் நினைத்தனர். ஆனால் பண்ணை வீட்டில் ரகசியமாக அமைக்கப்பட்டிருந்த படுக்கை அறை ஒன்றை தனிப்படையினர் கண்டுபிடித்தனர்.

அந்த அறைக்கு முன்பு பெண்களின் செருப்புகள் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த தனிப்படையில் இருந்த பெண் போலீசார் அந்த படுக்கை அறையை திறந்து தேடிய போது அந்த அறையில் யாரும் இல்லை. ஆனால் அந்த ரகசிய படுக்கை அறையில் ‘மல்லிகை பூ சென்ட் வாசம் வீசியது’ இதனால் தனிப்படையினருக்கு நடிகை கஸ்தூரி இங்குதான் பதுங்கி இருக்கிறார் என்று உறுதிப்படுத்தினர்.

பிறகு பெண் போலீசார் உதவியுடன் படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் பார்த்த போது, நடிகை கஸ்தூரி போர்வையை தன்மீது போர்த்திக்கொண்டு படுத்து இருந்தது தெரியவந்தது. பிறகு பெண் போலீசார் நடிகை கஸ்தூரியை கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை தனிப்படையின் பெண் போலீசார் உதவியுடன் ஐதராபாத்தில் இருந்து சாலைமார்க்கமாக 13 மணி நேரம் பயணம் செய்த இன்று 12 மணிக்கு அழைத்து வந்தனர்.

அவரை பலத்த பாதுகாப்புடன் போலீசார் காரில் சிந்தா திரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியது பற்றி விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து போலீசார், நடிகை கஸ்தூரியை எழும்பூர் நீதிமன்ற நடுவர் ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை நவ.29 வரை சிறையில் அடைக்க ஆணையிடப்பட்டுள்ளது. சென்னை அழைத்து வரப்பட்ட நடிகை கஸ்தூரி, எழும்பூர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் ரகுபதி ராஜா முன்னிலையில் கஸ்தூரி ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற காவலை அடுத்து, புழல் சிறையில் கஸ்தூரி அடைக்கப்படுவார்.

The post தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை நவ.29 வரை சிறையில் அடைக்க ஆணை appeared first on Dinakaran.

Related Stories: