டிரம்பை கொல்ல திட்டமிடவில்லை: அமெரிக்காவிடம் விளக்கமளித்த ஈரான்

வாஷிங்டன்: ‘டிரம்ப் மீதான எந்தவொரு தாக்குதலும் அமெரிக்காவுக்கு எதிரான போர் நடவடிக்கையாக கருதப்படும்’ என அமெரிக்கா எச்சரித்ததைத் தொடர்ந்து ‘அப்படிப்பட்ட எந்த திட்டமும் இல்லை’ என ஈரான், பைடன் நிர்வாகத்திடம் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் இருந்த போது கடந்த 2020ம் ஆண்டில் டிரோன் தாக்குதல் மூலம் ஈரானின் சக்திவாய்ந்த ராணுவ தளபதி காசிம் சுலைமானி பாக்தாத்தில் டிரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அமெரிக்கா நடத்திய இத்தாக்குதலுக்கு பழிக்கு பழியாக டிரம்பை கொல்ல ஈரான் சதித்திட்டம் தீட்டியதாகவும், சமீபத்தில் முடிந்த அதிபர் தேர்தலுக்கு முன்பாக டிரம்பை தீர்த்து கட்ட முயற்சிகள் நடந்ததாகவும் அமெரிக்க உளவுத்துறையான எப்பிஐ சமீபத்தில் பரபரப்பு குற்றம்சாட்டியது. இவற்றை ஈரான் அரசு மறுத்தது.

இதற்கிடையே, புதிய அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலும் முக்கியமான தேசிய பாதுகாப்பு கவலையாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும், டிரம்ப் மீதான தாக்குதல் அமெரிக்காவுக்கு எதிரான போர் நடவடிக்கையாக கருதப்படும் என்றும் தற்போதைய அதிபர் பைடன் நிர்வாகம் ஈரானுக்கு கடந்த செப்டம்பரில் எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, அமெரிக்காவுக்கு ஈரான் கடந்த மாதம் பதிலளித்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ஈரான் அனுப்பிய கடிதத்தில், ‘‘டிரம்பை கொல்ல முயற்சிக்க மாட்டோம்.

அவருக்கு எதிராக எந்த திட்டத்தையும் ஈரான் வகுக்கவில்லை. சுலைமானி படுகொலைக்கான நீதி சட்ட முறைப்படி பெற முயற்சிக்கப்படும்’’ என கூறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கடிதத்தை ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கையொப்பம் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. அதே சமயம், டிரம்ப் நிர்வாகத்தில் அரசின் செயல்துறை தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள தொழிலதிபர் எலான் மஸ்கை அமெரிக்காவுக்கான ஈரான் தூதர் அமிர் சயீத் இராவனி சந்தித்து பேசியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்போது, அமெரிக்காவுடன் மீண்டும் அணு ஒப்பந்தம் செய்ய ஈரான் விரும்புவதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான பதட்டத்தை குறைக்க உதவுமாறும் தூதர் இராவனி வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் நடத்திய ஈரான் மீது டிரம்ப் கோபத்தில் இருப்பதால் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு ஈரான் மீது தாக்குதல்கள் கடுமையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மஸ்க் உடனான சந்திப்பு குறித்த தகவல் முற்றிலும் பொய்யானது என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.

The post டிரம்பை கொல்ல திட்டமிடவில்லை: அமெரிக்காவிடம் விளக்கமளித்த ஈரான் appeared first on Dinakaran.

Related Stories: