மூன்றில் 2 பங்கு இடங்களை பிடித்து இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் கட்சி வரலாற்று சாதனை: யாழ்ப்பாணத்திலும் அதிக இடங்களை கைப்பற்றியது; ராஜபக்சே, ரணில்விக்ரமசிங்கே கட்சிகள் படுதோல்வி

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அனுரகுமார திசாநாயக்காவின் தேசிய மக்கள் சக்தி கட்சி மூன்றில் 2 பங்கு இடங்களை பிடித்து சாதனை வெற்றி படைத்துள்ளது. இலங்கையில் கடந்த செப்.21ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயகா அபார வெற்றி பெற்று புதிய அதிபராக செப்.23ல் பதவி ஏற்றார். அவரது தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 3 எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இதனால் அதிபர் பதவியில் அவர் பிறப்பிக்கும் உத்தரவுகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என்பதால், நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூர்யா நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து புதியநாடாளுமன்றத்தை தேர்வு செய்ய நவ.14ம் தேதி தேர்தல் நடந்தது. 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு 196 எம்பிக்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். மீதம் உள்ளவர்கள் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் அடிப்படையில் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்படுவார்கள். எனவே தேர்தல் நடந்த 196 இடங்களுக்கு 8,821 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிபர் அனுர குமார திசநாயகா கட்சியின் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, புதிய ஜனநாயக முன்னணி, ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன கட்சி உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தின.

நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. இலங்கையில் உள்ள 1.71 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. நேற்று அதிகாலை முன்னணி நிலவரங்கள் வெளிவரத்தொடங்கின. இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகா கட்சி ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றது. மொத்தம் உள்ள 225 இடங்களில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை. மொத்தம் பதிவான வாக்குகளில் 68.63 லட்சம் வாக்குகள், அதாவது 61.56 சதவீத வாக்குகள் பெற்று அதிபர் திசநாயகா கட்சி அமோக வெற்றி பெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை அந்த கட்சிக்கு கிடைத்தது. தேர்தல் நடந்த 196 இடங்களில் தேசிய மக்கள் சக்தி கட்சி 159 இடங்களை பிடித்து வரலாற்று சாதனை படைத்தது.

இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான இலங்கையின் சமகி ஜன பலவேகய கட்சி(எஸ்ஜேபி) 40 இடங்களை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழர்கள் நடத்தும் இலங்கை தமிழ் அரசு(ஐடிஏகே) கட்சி 8 இடங்களையும், முன்னாள் அதிபர் ரணில் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி(என்டிஎப்) 5 இடங்களையும், முன்னாள் அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(எஸ்எல்பிபி) மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலா 3 இடங்களையும் பெற்றன. தமிழ் மக்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணத்திலும் இலங்கை அதிபர் திசநாயகாவின் கட்சி அமோக வெற்றி பெற்றது. சிங்கள கட்சி ஒன்று அங்கு வெற்றி பெற்றது இதுவே முதன்முறையாகும். திசநாயாகா கட்சிக்கு அங்கு 80 ஆயிரம் ஓட்டுகளும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு 63 ஆயிரம் ஓட்டுகளும் கிடைத்தன. இதனால் யாழ்ப்பாணத்தில் 3 இடங்களை அதிபர் தலைமையிலான திசநாயகா கட்சி வென்றது. இலங்கை புதிய நாடாளுமன்றம் அடுத்த வாரம் கூடவுள்ளது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்
மொத்த இடங்கள் 225
தேர்தல் நடந்தவை 196
கட்சிகள் வெற்றி ஓட்டு சதவீதம்
என்பிபி 159 68,63,186 61.56
எஸ்ஜேபி 40 19,68,716 17.66
என்டிஎப் 5 5,00,835 4.49
எஸ்எல்பிபி 3 3,50,429 3.14
ஐடிஏகே 8 2,57,813 2.31

The post மூன்றில் 2 பங்கு இடங்களை பிடித்து இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் கட்சி வரலாற்று சாதனை: யாழ்ப்பாணத்திலும் அதிக இடங்களை கைப்பற்றியது; ராஜபக்சே, ரணில்விக்ரமசிங்கே கட்சிகள் படுதோல்வி appeared first on Dinakaran.

Related Stories: