இலங்கை நாடாளுமன்ற தேர்தல் : ஆளும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெரும்பான்மையை விட அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி!!

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அநுர குமார திசநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெரும்பான்மையை விட அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21ம் தேதி நடைபெற்றது. இதில், 55.89 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றார். அவரது தேசிய மக்கள் சக்திக்கு அப்போதைய நாடாளுமன்றத்தில் வெறும் 3 எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இதனால் எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றுவது கடினம் என்பதால் அதிபராக பதவியேற்ற மறுநாளே நாடாளுமன்றத்தை கலைத்து திசநாயக உத்தரவிட்டார். புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

21 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து அதிபரின் தேசிய மக்கள் சக்தி போட்டியிட்டது. இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவானது. இதையடுத்து வாக்கு எண்ணும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்படும் பட்சத்தில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 123 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றி பெற்றுள்ளது. சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 31 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சி 61.73 சதவீத வாக்குகள்; ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 17.74 சதவீத வாக்குகள் பெற்றுள்ளன. இதன் மூலம் இலங்கை அதிபர் திசநாயகேவின் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்தது.

The post இலங்கை நாடாளுமன்ற தேர்தல் : ஆளும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெரும்பான்மையை விட அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி!! appeared first on Dinakaran.

Related Stories: