×
Saravana Stores

சட்டவிரோதமாக முதலீடு செய்த வழக்கு லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஆதவ் அர்ஜுனாவிடமும் தீவிர விசாரணை; புதிய கட்சி ஒன்றுக்கு நன்கொடை வழங்கிய ஆவணமும் சிக்கியது

சென்னை: கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின். இவர் கேரளா, மேற்கு வங்கம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் நாடு முழுவதும் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சிக்கிம் மாநிலத்தில் அரசின் லாட்டரி சீட்டு அச்சடித்து விற்பனை செய்ததில் முறைகேடு செய்ததாக கடந்த 2019ம் ஆண்டு தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மருமகனும், விசிக துணை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்தினர். இந்த சோதனையில் லாட்டரி சீட்டு மூலம் சட்டவிரோதமாக ரூ.910 கோடி வரை சம்பாதித்ததும், அந்த பணத்தை 40 நிறுவனங்களில் முதலீடு செய்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து கடந்த ஆண்டு மே மாதம் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி, கைப்பற்றிய ஆவணங்களின் படி ரூ. 456.86 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது. பிறகு மீண்டும் 5 மாத இடைவெளியில் அக்டோபர் மாதம் 4 நாட்கள் மார்ட்டின் மற்றும் ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி ரூ.1300 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் மூலம் தேசிய கட்சிகளுக்கு நன்கொடையாக ரூ.1300 கோடி வரை வழங்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து கைப்பற்றிய ஆவணங்களை வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கணக்காய்வு செய்து விசாரணை நடத்திய போது, சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டு அச்சடித்து விற்பனை மூலம் கிடைத்த ரூ.910 கோடியை வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் உதவியுடன் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்ததும், அந்த முதலீட்டு நிறுவனங்களில் இருந்து வந்த வருமானத்தை தங்களது ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்து அதிக லாபம் அடைந்ததும் தெரியவந்தது. மேலும், மார்ட்டின் தனது கல்லூரிகளில், அதேபோல் ஆதவ் அர்ஜூனாவும் தனது நிறுவனங்களில் வருமானம் வந்தது போல் பல கோடி ரூபாய் கணக்கு காட்டி அதன் மூலம் சட்டவிரோத பணத்தை வருவாயாக கடந்த 2023-24ம் ஆண்டு கணக்கு காட்டியதும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை வெளிநாடுகளில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் மீண்டும் 3வது முறையாக தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் தொழில் பங்குதாரரான ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கு சொந்தமான கோவையில் 3 இடம், சென்னையில் 3 இடம், மேற்கு வங்கம், சிக்கிம் மாநிலத்தில் தலா 1 இடம் என மொத்தம் 8 இடங்களில் நேற்று முன்தினம் முதல் 2வது நாளாக நேற்று நள்ளிரவு வரை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தொழிலதிபர் மார்ட்டின் வீடு, ஓமியோபதி மருத்துவ கல்லூரி, அவரது அலுவலகம் மற்றும் சென்னை கோயஸ் கார்டனில் உள்ள மார்ட்டின் வீடு, திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள மார்ட்டின் மகன் நடத்தும் நிறுவனத்தில் இருந்து வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜூனா வீடு, அலுவலகத்தில் 2வது நாளாக விடிய விடிய நடந்த சோதனையில் புதிய அரசியல் கட்சி ஒன்றுக்கு பல கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியதற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களில் தனது தொழில் நிறுவனங்கள் மூலமும், ரொக்கமாக வழங்கியதற்கான சில குறிப்புகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே ஆதவ் அர்ஜூனாவிடம் கைப்பற்றிய ஆவணங்களை வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரடியாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2 வது நாள் சோதனையில் ரொக்க பணம், வெளிநாட்டு முதலீடுகள், பல்வேறு கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் நன்கொடை வழங்கியதற்கான ஆவணங்கள் கைப்பற்றி அதற்கான வருமானம் குறித்து மார்ட்டின் மற்றும் ஆதவ் அர்ஜூனாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் தான் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் நன்கொடை வழங்கிய விவரங்கள் முழுமையாக தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சட்டவிரோதமாக முதலீடு செய்த வழக்கு லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஆதவ் அர்ஜுனாவிடமும் தீவிர விசாரணை; புதிய கட்சி ஒன்றுக்கு நன்கொடை வழங்கிய ஆவணமும் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Lottery Martin ,Aadhav Arjuna ,Chennai ,Martin ,Coimbatore ,Kerala ,West Bengal ,Sikkim ,Dinakaran ,
× RELATED லாட்டரி மார்ட்டின் வீடுகளில்...