சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதி குடியிருப்புகள் மின் வாரியத்திற்கு ரூ.1 கோடி கட்டண பாக்கி வைத்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களும் வணிக பிரிவில் இடம்பெறும். அதேபோல நீதிபதி குடியிருப்புகள் வீட்டு இணைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றங்களின் மின் கட்டணத்தை செலுத்த வேண்டியது நீதிமன்ற பதிவாளரின் பொறுப்பு. பதிவாளர்கள் அரசு கருவூலத்தில் இருந்து நிதியை பெற்று, மின் வாரியத்திற்கு கட்டணத்தை செலுத்துவது தற்போது உள்ள நடைமுறை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு முதல் ரூ.19.5 லட்சம் மின் கட்டண பாக்கி வைத்துள்ளது. அதேபோல பூந்தமல்லி மாவட்ட நீதிமன்றமும் கடந்த 4 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தவில்லை, இந்த நீதிமன்றம்தான் அதிகபட்சமாக ரூ.57 லட்சம் கட்டண பாக்கி வைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகமும் ரூ.7.2 லட்சம் கட்டணம் செலுத்தவில்லை. மேலும் தலைமை நீதிபதியின் குடியிருப்பு கூட கடந்த பிப்ரவரி மாதம் முதல் கட்டணம் செலுத்தவில்லை, 3 முறை மின் கட்டணம் செலுத்த தவறிய நிலுவை தொகை ரூ.58,995. மேலும் ரூ.1.18 லட்சம் நீதிபதிகள் குடியிருப்புகளில் நிலுவையில் உள்ளது. இதேபோல சில நீதிமன்றங்கள் பல மாதங்கள் மற்றும் பல ஆண்டுகளாக மின் கட்டணத்தை செலுத்தவில்லை.
பூந்தமல்லி மாவட்ட நீதிமன்றத்தின் கட்டண நிலுவை தொடர்பாக காஞ்சிபுரம் பிரிவு தலைமை பொறியாளர் ஏற்கனவே நீதிபதியிடம் தெரிவித்துள்ளார். விரைவில் கட்டணம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாமதத்திற்கான கூடுதல் கட்டணம், அபராதம் மற்றும் மறு இணைப்புக் கட்டணங்களுடன் நிலுவைத் தொகை வசூலிக்கப்பட வேண்டும். அனைத்து அரசுத் துறைகளுக்கும் மையப்படுத்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்துவதற்கான திட்டத்தை நாங்கள் ஏற்கனவே மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். அதற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படலாம். அதன் பிறகு ஒவ்வொரு பில்லிங் சுழற்சியிலும் ஒரே நேரத்தில் அனைத்து அரசு கட்டிடங்களுக்கும் தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post நீதிமன்றங்கள், நீதிபதி குடியிருப்புகள் ரூ.1 கோடி மின் கட்டண பாக்கி: மின்வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.