கண் அழுத்த நோய் உள்ளிட்ட பார்வைத்திறன் குறைபாடுள்ள ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்வதற்காக சன் டி.வி. ரூ.75 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவச் சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, பார்வை திறன் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்னை அகர்வால் கண் மருத்துவமனைக்கு சன் டி.வி. 75 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை அகர்வால் கண் மருத்துவமனை நிர்வாகிகள் டாக்டர்கள் சவுந்தரி, சுதா, திரிவேணி ஆகியோரிடம் சன் டி.வி. சார்பில் மல்லிகா மாறன், காவேரி கலாநிதி மாறன் வழங்கினர்.
இந்த நிதியின் மூலம் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று அகர்வால் கண் மருத்துவமனை மண்டல மருத்துவ இயக்குனர் டாக்டர் சவுந்தரி தெரிவித்தார். ஏழை எளியோருக்கு கல்வி, அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல், தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக சன் டி.வி.யும், சன் பவுண்டேஷனும் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றன. சன் டி.வி. மற்றும் சன் பவுண்டேஷன் இதுவரை அளித்த நிதி உதவிகள் மூலம் அகர்வால் கண் மருத்துவமனையில் 8,603 பேருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post பார்வைத்திறன் குறைபாடுள்ள ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்ய சன் டி.வி. ரூ.75 லட்சம் நிதி உதவி appeared first on Dinakaran.