×
Saravana Stores

சென்னை சர்வதேச விமானத்தில் பாஸ்ட்-டிராக் திட்டம் தொடங்குவதில் தாமதம்: பயணிகள் கடும் அவதி

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடு செல்லும் மற்றும் வரும் இந்திய பயணிகள் குடியுரிமை சோதனை பிரிவில் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்து நின்று, சோதனை நடத்துவதை தவிர்க்கும் விதத்தில் \\”பாஸ்ட்டிராக் இமிகிரேஷன்-டிரஸ்டட் டிராவலர் புரோக்ராம்\\” [FTI-TTP] என்ற புதிய திட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. குடியுரிமை பிரிவில், அதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், டெல்லியில் இருந்து முறையான உத்தரவு வராததால் 3 மாதங்களுக்கும் மேலாக திட்டத்தை செயல்படுத்த முடியாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

குடியுரிமை சோதனை என்பது, மிகவும் முக்கியமான ஒரு சோதனை. நமது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இந்த சோதனையில் இருந்து யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட மாட்டாது. இந்த பிரச்னைகளில் இருந்து பயணிகளுக்கு விதிவிலக்கு கொடுக்கும் விதத்தில், மத்திய உள்துறை அமைச்சகம், பாஸ்ட் டிராக் இமிகிரேஷன்-டிரஸ்டட் டிராவலர் புரோக்ராம் [FTI-TTP] என்ற ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இந்த திட்டத்தில் பலன் பெற விரும்புபவர்கள், பயணம் செய்வதற்கு முன்னதாகவே, அதற்கான தனியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் தங்களை பதிவு செய்து இணைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான கட்டணத்தை ஒவ்வொரு முறை பயணம் செய்யும்போதும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஒருமுறை செலுத்தினால், அவர்களுடைய பாஸ்போர்ட் காலாவதி ஆகும் தேதி வரை, அந்த கட்டணம் செல்லுபடி ஆகும்.

அதன்பின்பு பயணம் செய்யும் தேதியில், சென்னை விமான நிலையம் வரும்போது, குடியுரிமை சோதனை பிரிவில் அவர்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்காக தனி கவுன்டர்கள் இருக்கும். அந்த கவுன்டர்களில் சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம் அவர்களுடைய முகம் அடையாளங்கள் பரிசோதிக்கப்பட்டு, குடியுரிமை அதிகாரிகளின் நீண்ட நேர கேள்விகள் இல்லாமல் உடனடியாக அவர்களுடைய பாஸ்போர்ட்டில் குடியுரிமை முத்திரை பதிக்கப்பட்டு, பயணிகள் வேகமாக தங்கள் அடுத்த கட்ட பாதுகாப்பு சோதனைக்கு சென்று விடலாம்.

இந்த அதிநவீன முறை கடந்த ஜூன் மாதம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, கொச்சி மற்றும் அகமதாபாத் ஆகிய 7 விமான நிலையங்களில் ஆகஸ்ட் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அதற்கான ஏற்பாடுகள் அதிவேகமாக நடந்தன.

அதற்கான கருவிகள் பொருத்தும் பணிகள், சர்வதேச வருகை குடியுரிமை பகுதியில் இரண்டு சிறப்பு கவுன்டர்கள், புறப்பாடு குடியுரிமை பகுதியில் இரண்டு சிறப்பு கவுன்டர்கள், தனியாக அமைக்கவும் அமைக்கப்பட்டன. ஆகஸ்ட் மாதம் தொடங்கி இருக்க வேண்டிய பாஸ்ட் டிராக் இமிகிரேஷன்-டிரஸ்ட் டிராவலர் புரோக்ராம் திட்டம் மூன்று மாதங்களுக்கு மேலாகியும், இதுவரையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் செயல்பாட்டிற்கு வரவில்லை.

அதே நேரத்தில் டெல்லியை தொடர்ந்து மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட சில விமான நிலையங்களில் செயல்பாட்டிற்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சென்னை விமான நிலையத்தில் மட்டும் இந்தத் திட்டம் காலதாமதம் என்ன காரணம் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு, இங்கு அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டது.

டெல்லியில் உள்ள குடியுரிமை தலைமையகத்தில் இருந்து, உத்தரவு வந்ததும் சென்னையில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று கூறுகின்றனர். இருப்பினும், டெல்லியில் உள்ள குடியுரிமை தலைமையகம், இதை கொடுக்க தாமதம் செய்வதால் சென்னையில் பணிகள் அனைத்தும் முடிந்த பின்பும், திட்டம் செயல்பாட்டிற்கு வராமல், 3 மாதங்களுக்கு மேலாக தாமதம் ஏற்பட்டு, சென்னை விமான நிலைய குடியுரிமை பிரிவில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்படுகின்றனர்.

The post சென்னை சர்வதேச விமானத்தில் பாஸ்ட்-டிராக் திட்டம் தொடங்குவதில் தாமதம்: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Chennai International Airport ,CHENNAI ,Chennai International ,
× RELATED ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது...