காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே கிடப்பில் போடப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை பணி: விரைந்து முடிக்க பொதுமக்கள் வேண்டுகோள்

காஞ்சிபுரம், நவ.15: காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெறும் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரத்தில், காஞ்சிபுரம் கிழக்கு மற்றும் புதிய ரயில் நிலையம் என 2 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளது. புதிய ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதி சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைப்பதால் அப்பகுதி வழியாக அதிகளவு போக்குவரத்து இருக்கும். இந்த, ரயில் நிலையத்தில் கேட் மூடப்பட்டால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து நெரிசலில் சிக்கும்நிலை இருந்தது.

இதனால், மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் – பொன்னேரிக்கரையில் உள்ள புதிய ரயில் நிலையம் அருகில் 2017ம் ஆண்டு ₹54.36 கோடி திட்ட மதிப்பில் மேம்பாலம் கட்டுமானப் பணி நிறைவு பெற்று, கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் முதல் செயல்பாட்டில் உள்ளது. எனவே, பழைய சாலையில் இருந்த ரயில்வே கேட்டை ரயில்வே துறை நிரந்தரமாக மூடி, அதன் அருகே வாகனங்கள் செல்லாத அளவுக்கு மெகா பள்ளம் அமைத்து தடை செய்தது. இதனால், அன்னை இந்திரா நகர் மற்றும் கனக துர்கை அம்மன் நகர் விரிவாக்க பகுதிகளில் உள்ள சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிப்புக்குள்ளாகினர்.

இப்பகுதி மக்களின் போக்குவரத்திற்கு மிக முக்கிய சாலையாக இருந்த இந்த சாலையை ரயில்வே நிர்வாகம் மூடியதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அலுவலக ஊழியர்கள், மூத்த குடிமக்கள் என யாரும் செல்ல முடியாமல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் மேம்பாலம் வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் அதிக வசிக்கும் இப்பகுதியில் அவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் மேம்பாலத்தை சுற்றி செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவ – மாணவிகள் பள்ளி நேரம் முடிந்து மாலை நேர வகுப்புகளுக்கு பின் இரவு நேரங்களில் இப்பாலம் வழியாக செல்லும்போது அச்சமாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், பெண்கள் குடும்ப தேவைக்கான பொருட்கள் வாங்க கூட அதிகளவில் ஆட்டோ கட்டணம் செலுத்தி பயணிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, இப்பகுதி பொதுமக்கள் எளிதாக ரயில்வே கிராசிங்கை கடக்கும் வகையில், உடனடியாக ரயில்வே கேட் பகுதியில் தொடங்கப்பட்ட சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர், ரயில்வே நிலைய மேலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதன்படி, ரயில்வே கிராசிங்கிற்கு கீழே பாதசாரிகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் சென்று வரும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கியது. இந்த, சுரங்கப்பாதை அமைக்கும் பணி மூன்று மாதத்தில் நிறைவு பெற்று, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், சுரங்கப்பாதை அமைப்பதற்கான, கான்கிரீட் பாக்ஸ் கட்டும் பணிகள் மட்டுமே நடந்தது. தொடர்ந்து பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் பகுதியில் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே கிடப்பில் போடப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை பணி: விரைந்து முடிக்க பொதுமக்கள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: