கலெக்டர் அலுவலகத்தில் குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள், அரசு அதிகாரிகள் அவதி

செங்கல்பட்டு: கலெக்டர் அலுவலகத்தில் குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அவதி அடைந்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்திலிருந்து புதிதாக பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டு நான்காண்டுகளுக்கு மேலாகிறது. மேலும், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அனைத்து துறை அலுவலகங்களும் இந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றனர். இதில், பயன்பாட்டிற்கு வந்து ஓராண்டுகள் கடந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கழிவறை துர்நாற்றம் வீசுவதாகவும், கழிவுநீர் வெளியேறாமல் கழிவறையில் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அதுபோன்று, கால்நடைகள் பொது இடத்தில் உலா வருவது தடை செய்யப்பட்ட நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே கால்நடைகள் உலா வருவது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வயதானவர்களை மாடுகள் தாக்கும் சம்பவங்கள் நடைபெறும் நிலையில், அவற்றை கண்டு கொள்ளாமல் இருப்பது மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தை காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக குரங்குகளின் அட்டகாசமும் அதிகமாக இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். குரங்குகள் வெளிப்புறத்தில் இருக்கும் டியூப் லைட் உள்ளிட்டவற்றை உடைத்து விட்டு செல்வதும், அவ்வழியாக செல்லும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதும் மனு கொடுக்கும் மற்றும் அலுவல் விஷயமாக வரும் பொது மக்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. உடனடியாக இதில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post கலெக்டர் அலுவலகத்தில் குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள், அரசு அதிகாரிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: