குடகு: கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரியின், அய்யங்கேரி கிராமத்தில் வசிப்பவர் மொய்து. ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். மொய்துவின் மூத்த மகள் சபியா (13), கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் கேரளா மாநிலம் காசர்கோடுவில் வசிக்கும் ஹம்ஜா என்பவரின் வீட்டில், வீட்டு வேலை செய்து கொண்டு படித்து வந்தார். இந்நிலையில் சிறுமி திடீரென மாயமானார். இதையறிந்த பெற்றோர், அய்யங்கேரி கிராமத்தினர், காசர்கோடுவின் சில தொண்டு அமைப்புகள், ஹம்ஜாவை கைது செய்யும்படி தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஹம்ஜா, அவரது மனைவி மற்றும் சகோதரர் ஆகியோரை காசர்கோடு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் சபியாவை கொலை செய்து, கோவாவின் அணை ஒன்றின் அருகில் புதைத்தது தெரிந்தது. எதற்காக கொலை செய்தார்கள் என தெரியவில்லை.
2008ல் கோவாவில் சிறுமியின் எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணையை முடித்து, கேரள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர். விசாரணையில் குற்றம் உறுதியானதால், இவர்களுக்கு நீதிமன்றம் 2019ல் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை கேரள உயர் நீதிமன்றம், ஆயுள் தண்டனையாக மாற்றியது. ஆனால் தோண்டி எடுக்கப்பட்ட சிறுமியின் எலும்பு கூடு நீதிமன்றம் வசம் இருந்தது. தங்களிடம் ஒப்படைக்கும்படி, நீதிமன்றத்தில் பெற்றோர் மனு தாக்கல் செய்தனர். பல ஆண்டுகள் போராட்டத்துக்கு பின், இம்மாதம் 6ம் தேதி, சபியாவின் எலும்பு கூடு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று முன்தினம் சாஸ்திரப்படி அடக்கம் செய்தனர்.
The post கர்நாடகாவை சேர்ந்த சிறுமி கேரளாவில் கொலை: 18 ஆண்டுக்கு பின் எலும்புக்கூடு அடக்கம் appeared first on Dinakaran.