பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு

கோவை, நவ. 14: பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என கோவை வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர்களால் எதிர்பாராமல் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பு ராபி பருவத்தில் மக்காச்சோளம், சோளம், மற்றும் கொண்டைக்கடலை ஆகிய பயிர்களுக்கு பிர்க்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டு அதன் கீழ் வரும் அனைத்து வருவாய் கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் இணைய ராபி பருவ மக்காச்சோளம் மற்றும் கொண்டைக்கடலை பயிருக்கு வரும் 30-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். மேலும், சோளம் பயிருக்கு டிசம்பர் 16-ம் தேதி வரையும் காப்பீடு செய்ய கடைசி நாள் ஆகும். சோளத்திற்கு ரூ.163, மக்காசோளத்திற்கு ரூ.541.5 மற்றும் கொண்டைக்கடலை பயிருக்கு ரூ.231 ஏக்கருக்கு செலுத்த வேண்டும். வங்கிக்கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், பொது இ-சேவை மையங்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் காப்பீடு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு கட்டணம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீட்டு தெகையை செலுத்திய பின்னர் அதற்கான ரசீது பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு appeared first on Dinakaran.

Related Stories: