கோவை, டிச.2: கோவை சிங்காநல்லூர் பகுதியில் இலட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளுக்காக இப்பகுதியில் உள்ள பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டன. இதனால் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
குறிப்பாக சிங்காநல்லூர் வெள்ளலூர் சாலை, ஒண்டிபுதூர் இருகூர் சாலை, நீலிக்கோணாம்பாளையம் சாலை, நெசவாளர் காலனி, உலகளந்த பெருமாள் கோவில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து, குண்டும் குழியுமாக இருக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சிங்காநல்லூர் சுற்றுவட்டாரத்தில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
இதனால் சாலைகளை பயன்படுத்தும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சிதிலமடைந்த சாலைகளால் சில சமயங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இரு சக்கர வாகனங்களை இயக்கும் பெண்களும், முதியவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தனர்.
The post சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.