×

நாகப்பட்டினத்தில் டைடல் பூங்கா அமைக்க இடம் ேதர்வு: 6 ஏக்கரில் அமைய உள்ளது

நாகப்பட்டினம்,நவ.13: நாகப்பட்டினத்தில் 6 ஏக்கரில் அமைய டைடல் பூங்க அமைய உள்ள இடத்தை அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நாகப்பட்டினத்தில் டைடல் பூங்கா அமைப்பது தொடர்பாக இடம் தேர்வு செய்யும் பணிகளை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக நாகப்பட்டினம் அருகே செல்லூர் பகுதியில் 6 ஏக்கர் பரப்பிலான இடத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

அப்போது அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
நாகப்பட்டினம் மாவட்டத்தின் வளர்ச்சி அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உயர்த்த நோக்கத்துடன் நாகப்பட்டினம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தொழில்துறையைப் பொறுத்தவரையில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி தொழில் வளர்ச்சிகள் மேம்படுத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

டெல்டா மாவட்டங்களில் நீண்ட காலமாக பரவலாக்கப்பட்ட வளர்ச்சி இல்லை. எனவே அந்தப் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில் நாகப்பட்டினம் மாவட்ட வளர்ச்சித் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். சுற்றுச்சூழல் பாதிப்பின்றி இங்கு உள்ள வளங்களை கொண்டு தொழில்கள் ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டது. விவசாய மற்றும் மீனவக் குடும்பங்கள் நிறைந்த பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் உள்ளது. இந்த குடும்பங்களைச் சேர்ந்த படித்த, பட்டதாரி பிள்ளைகள் நீண்ட நெடிய தூரம் சென்று பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

படித்த மாணவர்கள், இளைஞர்கள் இங்கேயே பணிபுரிந்து பயன்பெறும் வகையில் டைடல் பூங்கா அமைக்க வேண்டும் என பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இப்பகுதி மக்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. தொழிற்துறை தொடர்பாக சென்னையில் நடைபெறும் கூட்டத்தில், நாகப்பட்டினத்தில் டைடல் பூங்கா குறித்து பேசப்படும். முதல்வரிடம் டைடல் பூங்கா முன்மொழிவை கொடுக்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மிகப்பெரிய தொழில் வளர்ச்சி காத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அங்கு வந்த விவசாயிகள், அமைச்சர் டிஆர்பி ராஜாவிடம் கூறியதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 லட்சம் விவசாயிகளின் குழந்தைகள் படிக்கின்றனர். இவர்கள் படித்த பின்னர் வேலை தேடி ஜவுளி கடைகளுக்கு சென்னை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். நாகப்பட்டினத்தில் டைடல் பூங்கா அமைந்தால் மிகப்பெரிய வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே நாகப்பட்டினம் மாவட்டம் அடுத்த கட்ட இடத்தை நோக்கி செல்ல டைடல் பூங்கா அமைத்து தர வேண்டும் என்றனர். விவசாயிகள் கூறியதை கேட்ட அமைச்சர் கூறியதாவது, பச்சைதுண்டு அணிந்த விவசாயிகள் டைடல் பூங்கா வேண்டும் என்று கேட்பது மகிழ்ச்சியாக உள்ளது.

விவசாயிகளின் வளர்ச்சிக்காக முதல்வர் பாடுபடுகிறார். பல திட்டங்களை அறிவித்து, நிதிகளையும் ஒதுக்கியுள்ளார். அதே போல் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி மேம்படுத்த வேண்டும் என்பதில் முதல்வர் கவனம் செலுத்துகிறார். அதன்படி தொழில் வளர்ச்சி இல்லாத மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் டைடல் பூங்கா அமைய இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால் விவசாய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் வேலைவாய்ப்பை பெறுவார்கள். இதன் அடிப்படையில் தான் நாகப்பட்டினத்தில் டைடல் பூங்கா அமைய இடம் தேர்வு செய்ய ஆய்வு பணி நடந்தது என்றார்.

இதில் கலெக்டர் ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, ஆர்டிஓ அரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post நாகப்பட்டினத்தில் டைடல் பூங்கா அமைக்க இடம் ேதர்வு: 6 ஏக்கரில் அமைய உள்ளது appeared first on Dinakaran.

Tags : Tidal Park ,Nagapattinam ,T. R. B. Raja ,Mahesh ,Minister ,Dinakaran ,
× RELATED பட்டாபிராம் டைடல் பூங்கா, விழுப்புரம்,...