கள்ளக்குறிச்சி, ஜன. 3: கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவு வீட்டில் இருந்த இளம்பெண்ணிடம் தாலி செயினை பறித்து சென்ற 3 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்துள்ள ரோடுமாமாந்தூர் பம்பு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி மீனா(55). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமி வீட்டின் கதவை திறப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து மீனா கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம ஆசாமி, மீனா கழுத்தில் இருந்த தாலி செயினை பறிக்க முயன்றுள்ளான். அப்போது சுதாரித்துக் கொண்ட மீனா தனது இரண்டு கைகளால் செயினை இறுக்கமாக பிடித்து கொண்டு கூச்சலிட்டார். இதனை கேட்டதும் அவரது கணவர் ஜெயதீசன் பதறியடித்து எழுந்து ஓடிவந்தார். ஆனால் அதற்குள் வீட்டின் அருகில் மறைந்த இருந்த மேலும் இரண்டு பேர் ஓடிவந்து கையில் கிடைத்த தாலிசெயினை மட்டும் பறித்துக் கொண்டு 3 மர்ம நபர்களும் தப்பியோடிவிட்டனர்.
மீதமுள்ள தாலி செயினை மீனா தனது கையில் பிடித்துக்கொண்டார். இதனிடையே அங்கு ஓடிவந்த ஜெகதீசன் மற்றும் அக்கம்பக்கத்தினர் மர்ம ஆசாமிகளை துரத்தி சென்றனர். ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பியோடி விட்டனர். சுமார் 18 கிராம் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து மீனா கள்ளக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாலி செயினை பறித்துகொண்டு தப்பியோடிய மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவு பரபரப்பு: வீட்டு கதவை தட்டி இளம்பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு appeared first on Dinakaran.