×

நாகப்பட்டினம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு வழங்கும் உணவு

நாகப்பட்டினம்,நவ.13: நாகப்பட்டினத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு வழங்கும் உணவு சுவையாக உள்ளதா? என்று அமைச்சர்கள் மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர். பிற்படுத்தபட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களின் நலன் கருதி கலர் டிவி வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

நாகப்பட்டினம் சமாந்தான்பேட்டையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட துறை சார்பில் இயங்கும் அரசினர் பாலிடெக்னிக் விடுதியை அமைச்சர்கள் மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் தரமான உணவு வழங்கப்படுகிறதா? இரவு நேரங்களில் தூங்குவதற்காக பாய், தலையணை, போர்வை ஆகியவை வழங்கப்படுகிறதா என கேட்டார். அப்போது மாணவர்கள் வழங்கப்படுகிறது என கூறினர்.

இதை தொடர்ந்து மாதந்தோறும் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு ரூ.1,100 வழங்கப்பட்டது. முதல்வர் உத்தரவின்படி தற்பொழுது ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை சரியான முறையில் கிடைக்கிறதா என கேட்டார். இதற்கு மாணவர்கள் மாதந்தோறும் கிடைக்கிறது என்றனர். இதை தொடர்ந்து விடுதியில் வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தரத்தை ஆய்வு செய்தார். சமையல் அறைக்கு அமைச்சர்கள் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அனைத்து பொருட்களும் தரமாக இருந்தது.

விடுதிகளில் தங்கிய படிக்கும் மாணவர்கள் நலன் கருதி அனைத்து விடுதிகளுக்கும் கலர் டிவி வழங்கப்பட்டு வருகிறது. எல்கார்ட் நிறுவனம் மூலம் டிவி வழங்கப்படுகிறது. எல்லா விடுதிகளுக்கும் டிவி கிடைத்து விடும் என்றார். இதை தொடர்ந்து நாகப்பட்டினம் அருகே தெத்தி பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் டாப்செட்கோ திட்டத்தின் கீழ் சமையல் செய்வதற்காக கடன் வழங்கப்பட்டுள்ள இடத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அப்போது கடன்பெற்ற பயனாளிகள் நாள் ஒன்றுக்கு 200 நபர்களுக்கு சமையல் செய்யும் அளவிற்கு பாத்திரங்கள் வைத்துள்ளோம். சைவம் அல்லது அசைவம் உணவு வகைகள் சமையல் செய்து விநியோகம் செய்யப்படுகிறது. தொழிலாளியாக இருந்த எங்கள் குடும்பத்தை முதலாளியாக முதல்வர் மாற்றியுள்ளார் என்றனர்.

இதை தொடர்ந்து அருகில் செங்கல்சூளை அமைய கடன் வழங்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, கலெக்டர் ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், எம்எல்ஏ முகம்மதுஷாநவாஸ், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத்தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

The post நாகப்பட்டினம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு வழங்கும் உணவு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam Government Polytechnic College ,Nagapattinam ,Government Polytechnic College ,Meiyanathan ,Anpil Mahesh Poiyamozhi ,Dinakaran ,
× RELATED திருக்குவளை, சாட்டியக்குடி பகுதியில்...