×

குறிப்பிட்ட சமூகப் பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் எனக் குறிப்பிட்டு ஏன் கஸ்தூரி கூறினார்?: ஐகோர்ட் கண்டனம்

மதுரை: தெலுங்கு மக்கள் குறித்த அவதூறு பேச்சு வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமின் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை எழும்பூரில் கடந்த 4ம் தேதி பிராமண சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியது தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நடிகை கஸ்தூரிக்கு எதிராக தமிழகம் முழுவதும் தெலுங்கு அமைப்பினர் புகார் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல் தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்க மாநில செயற்குழு உறுப்பினரான சன்னாசி (71), மதுரை மாவட்டம் திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில், நடிகை கஸ்தூரி மீது ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.

இந்நிலையில், மதுரை திருநகர் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்துள்ளார். அதில், ‘‘தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு நான் வருத்தம் தெரிவித்துள்ளேன். ஆனால், அரசியல் உள்நோக்கத்துடன், என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பிக்கும் நிபந்தனைகளை பின்பற்றத் தயாராக உள்ளேன். எனவே, இந்த வழக்கில் போலீசார் என்னை கைது செய்யாமல் இருக்க, எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தெலுங்கு மக்கள் குறித்த நடிகை கஸ்தூரி பேசிய வீடியோ நீதிபதி முன்பு ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து அரசு தரப்பில், “நடிகை கஸ்தூரி திட்டமிட்டு தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார். நடிகை கஸ்தூரி மன்னிப்பு கோரிவிட்டால் மட்டும் வருத்தம் சரியாகிவிடாது. தெலுங்கு மக்களை இழிவாக பேசியது தொடர்பாக கஸ்தூரி மீது 6 வழக்குகள் பதிவாகி உள்ளன,”எனத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து, இதுபோன்ற வெறுப்பு பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது; தேவையற்ற பேச்சு. உச்ச நீதிமன்றம் இதுபோன்ற வெறுப்பு பேச்சைக் கேட்டவுடன் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென கூறி உள்ளது. இது போன்ற வெறுப்பு பேச்சு ஏன்?; தமிழ்நாட்டில் தெலுங்கு மக்களை எப்படி பிரித்துப் பார்க்க முடியும்?. தெலுங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் கிடையாது; தமிழ்நாட்டின் ஒரு பகுதியினர்தான்.

நீங்கள் மன்னிப்புக் கேட்டதாக தெரியவில்லை; பேசியதை நியாயப்படுத்துவது போல் உள்ளது. கற்றவர், சமூக ஆர்வலர் என தன்னை கூறும் கஸ்தூரி எப்படி இப்படி கருத்தை தெரிவிக்கலாம்?. அந்தப்புரத்துக்காக வந்தவர்கள் தெலுங்கு சமூக மக்கள் என கஸ்தூரி ஏன் கூறினார்.குறிப்பிட்ட சமூக பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் என குறிப்பிட்டு ஏன் கூறினார்? அதற்கான அவசியம் என்ன? தன்னை கற்றவர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி எனக் கூறிக் கொள்ளும் கஸ்தூரி இப்படிப்பட்ட கருத்தை தெரிவிக்கலாமா?.கஸ்தூரியின் பேச்சு உள்ள வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post குறிப்பிட்ட சமூகப் பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் எனக் குறிப்பிட்டு ஏன் கஸ்தூரி கூறினார்?: ஐகோர்ட் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Kasthuri ,Madurai ,Brahmin Association ,Egmore, Chennai ,Puram ,
× RELATED அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்