- பொங்கல் திருவிழா
- சென்னை சங்கமாம்-நம்ம உரு விழா
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- சென்னை சங்கம்-நம்ம உரு விழா
- சென்னை,
- பொங்கல் நாட்கள்
சென்னை: பொங்கல் விழாவை ஒட்டி சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவை 13ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னையில், தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா என்ற பிரம்மாண்ட கலைவிழா கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் சங்கமம் கலை நிகழ்ச்சிகளை சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 13ம் தேதி கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத் திடலில் தொடங்கி வைக்கிறார். சங்கமம் கலை நிகழ்ச்சிகள் 17ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் சென்னை மாநகரின் முக்கியமான 18 இடங்களில் நடைபெறுகின்றன.
விழா நடத்துவது குறித்து, தூத்துக்குடி நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் ஒருங்கிணைப்பு துறைகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பி சந்தரமோகன், முதலமைச்சரின் செயலாளர் எம்.எஸ்.சண்முகம், சுற்றுலாத் துறை ஆணையர் ஷில்பா பிரபாகர் சதீஷ், அரசு அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் கவிதா ராமு, முதலமைச்சரின் இணைச் செயலாளர் கோ.லட்சுமிபதி, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் சே.ரா.காந்தி, இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் சீ.சௌமியா, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் ஜன.13ம் தேதி மாலை 6.00 மணியளவில் கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத் திடலில் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைப்பார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் முன்னணி கலைஞர்களுடன் 200 கிராமிய கலைஞர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் வெகுசிறப்பாக நடைபெறும். பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சென்னை இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா வளாகம், சைதாப்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் விளையாட்டு மைதானம், எழும்பூர் அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சித் திடல், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் 14.1.2025 முதல் 17.1.2025 வரை நான்கு நாட்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கலைவிழா நடைபெற உள்ளது.
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம். துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம். தேவராட்டம், சேவையாட்டம். கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் சென்னையின் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்கள் ஆகியோரும் கலை நிகழ்ச்சி வழங்க உள்ளார்கள். இவற்றுடன் மகாராஷ்டிராவின் லாவணி, ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் துர்சி நிருத்தியா, கோவாவின் விளக்கு நடனம், மிசோராம் மூங்கில் நடனம் ஆகியவைகளும் நடைபெற உள்ளன.
தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் வெளிப்படுத்தும் நமது நாட்டுப்புறக் கலை வடிவங்களைப் பெருநகர சென்னைவாழ் பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாகவும், பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்பெறும் பொருட்டும் இவ்விழா சென்னை மாநகரில் நடத்தப்படுகிறது. இவ்விழா நடைபெறும் நாட்களில் அனைத்து இடங்களிலும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெறும் வகையில் உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post பொங்கல் விழாவை ஒட்டி சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவை 13ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.