×

அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 11 பெண்கள் உள்பட 115 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (12.11.2024) ஆணையர் அலுவலகத்தில் 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி முடித்த 11 பெண்கள் உள்பட 97 மாணவர்கள், ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் மூன்றாண்டு ஓதுவார் பயிற்சி முடித்த 9 மாணவர்கள், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடித்த 9 மாணவர்கள் என ஆக மொத்தம் 115 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் பொறுப்பேற்ற திராவிட மாடல் அரசு, கடந்த காலங்களில் முடக்கப்பட்டிருந்த அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், திவ்ய பிரபந்த பாடசாலை போன்ற பயிற்சி பள்ளிகளை எல்லாம் புனரமைத்து, மாணவர் சேர்க்கை நடத்தி பயிற்சி அளித்து வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு பயிற்சி முடித்த 115 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. 2,000 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டத்தின் வெற்றியாக இதனை கருதுகிறோம். அனைத்திலும் அனைவரும் சமம், ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமுதாயம் காண வேண்டும் என்று நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக போராடி வந்த போராட்டத்தின் வெற்றியாக திராவிட மாடல் அரசில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 11 பெண்கள் அதற்கான சான்றிதழ்களை பெற்றுள்ளனர். இது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓதுவார் பயிற்சியினை முடித்த 9 நபர்கள், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி முடித்த 9 நபர்கள் உள்பட 115 நபர்களுக்கும் துறையின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து நீங்கள் அனைவரும் தேவாரம், மங்கல இசை முழங்க அனைத்து திருக்கோயில்களிலும் உங்களுடைய பணியை நீங்கள் தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தளவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் 29 அர்ச்சகர்களுக்கு திராவிட மாடல் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கிறது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 11 திருக்கோயில்களில் பெண் ஓதுவார்கள் பணி நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 10 கல்லூரிகளில் 12,212 மாணவ, மாணவியரும், 25 பள்ளிகளில் 10,736 மாணவ, மாணவியரும் கல்வி பயின்று வருகின்றனர். அம்மாணவர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தந்திடும் வகையில் பள்ளிகளில் ரூ.107 கோடி மதிப்பீட்டில் 167 பணிகளும், கல்லூரிகளில் ரூ.83.33 கோடி மதிப்பீட்டில் 54 பணிகளும் நடைபெற்று வருகின்றன. பழனி திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவுத் திட்டம் முதன்முதலான செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசு அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலன் காக்கும் அரசாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கொரோனா காலங்களில் அர்ச்சகர்களுக்கு உதவிதொகையாக ரூபாய் 4,000 மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை பொருட்களை வழங்கியது. அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் புத்தாடைகள் மற்றும் சீருடைகள், அர்ச்சகர் ஓய்வூதியம் தொகை ரூ.4000 மாக உயர்வு, 17,000 ஒருகால பூஜை திட்ட அர்ச்சகர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை, ரூ.136 கோடி செலவில் 89 குடியிருப்புகளில் 500 வீடுகள், ஒருகால பூஜைதிட்ட அர்ச்சகர்களின் குழந்தைகளின் உயர்கல்வி பயில 500 மாணவர்களுக்கு ரூ.10,000 கல்வி உதவித்தொகை, ஓய்வு பெற்ற அர்ச்சகர்களுக்கு பொங்கல் கருணைகொடை, ஆண்டிற்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடற்பரிசோதனை திட்டம் என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம்.

முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களை உடனடியாக துணை அர்ச்சகர்களாக திருக்கோயில்களில் நியமனம் செய்து ரூ.8,000 ஊக்கத்தொகையாக வழங்கிட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை தொடர்ந்து கண்காணித்து நிச்சயம் நல்லதொரு தீர்ப்பை பெறுவோம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெறுபவர்கள் கல்வி கற்பதற்கு எவ்வித இடையூறுமின்றி பயிற்சி பள்ளிகளில் நேரத்தை ஒதுக்கி தந்திருக்கின்றோம். ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம் பயிற்சி முடித்தவர்களுக்கு எந்ததெந்த திருக்கோயில்களில் அந்த பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றதோ அதற்கு முறையாக நேர்காணல் நடத்தி அந்த பணிகளை நிரப்பி வருகின்றோம். அர்ச்சகர் நியமனம் தொடர்பாக பலர் வழக்குகளை தொடுத்துள்ளதால் அந்த வழக்குகள் அனைத்தும் ஒருங்கிணைத்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த மாத இறுதிக்குள் அந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அரசின் சார்பிலும் துறையின் சார்பிலும் எடுத்து வைக்கப்படுகின்ற வாதங்களை குறித்து மூத்த வழக்கறிஞர்களோடு தொடர்ந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கின்றோம். நீதிமன்ற தீர்ப்பு என்பது நியாயத்தின் பக்கம் தான் இருக்கும்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபப்பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து துணை முதலமைச்சர் தலைமையில் அந்த மாவட்டத்தின் அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார நிகழ்வினை எவ்வித சிறு அசம்பாவிதமும் இன்றி பக்தர்கள் மனநிறைவோடு மகிழ்ச்சி அடையும் வகையில் நடத்தினோமா, அதேபோல திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவினையும் நடத்தி காட்டுவோம். இந்தாண்டு தீபத் திருவிழாவிற்கு சுமார் 35 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது அதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தீபத் திருவிழாவை அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்போடு நடத்தி காட்டுவோம் என்று தெரிவித்தார். இந்நிகழ்வின்போது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ,ஆ,ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆ.ப., திருமதி சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் ச.லட்சுமணன், பொ.ஜெயராமன், திருமதி கோ.செ.மங்கையர்க்கரசி, திருமதி இரா.வான்மதி, திருமதி கி.ரேணுகாதேவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 11 பெண்கள் உள்பட 115 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு! appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekarbabu ,Arshagar and ,Oduwar Training Schools ,Chief Minister ,Tamil Nadu ,K. ,Stalin ,Hindu ,P. K. ,Arshagar Training ,Arshagar Training Schools ,Office ,Arshakhar and Oduwar training schools ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில்...