சென்னை ஐஐடியில் செயற்கைகோள், ராக்கெட் வெப்பநிலை ஆய்வு மையம்: இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: செயற்கைக்கோள், ராக்கெட் வெப்பநிலை ஆராய்ச்சி மையம் அமைப்பது தொடர்பாக இஸ்ரோவுடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) உதவியுடன் சென்னை ஐஐடியில் திரவ மற்றும் வெப்பவியல் சிறப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐஐடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்தானது. ஐஐடி சார்பில் டீன் (தொழில் ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி) பேராசிரியர் மனு சந்தானமும், இஸ்ரோ சார்பில் அதன் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு இயக்கக இயக்குநர் விக்டர் ஜோசப்பும் கையெழுத்திட்டனர். அப்போது ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியரும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் பட்டமாட்டா உடனிருந்தார்.

இந்த ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு இஸ்ரோ ஒரு கோடியே 84 லட்சம் நிதியுதவி செய்கிறது. இங்கு ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பான வெப்பநிலை மே்லாண்மை ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். ராக்கெட், செயற்கைக்கோள் வடிவமைப்பு, பகுப்பாய்வு, பல்வேறு உதிரிபாகங்கள் சோதனையின்போது எழும் வெப்பநிலை தொடர்பான சிக்கல்களுக்கு ஐஐடி பேராசிரியர்கள் தொழில்நுட்ப ரீதியாக உதவிசெய்வர்.

இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளில் ஏற்படும் வெப்பநிலை மேலாண்மை சவால்களை எதிர்கொள்ள இந்த மையம் ஓர் ஆய்வுத்தளமாக செயல்படும். செயற்கைகோள் வெப்பநிலை மேலாண்மை, திட, திரவ எரிபொருட்களில் இயங்கும் ராக்கெட்டுகளில் ஏற்படும் எரிதிறன் பிரச்சினை, திரவ எரிபொருள் சேமிப்புக்கலனில் ஏற்படும் சவால்கள் தொடர்பான ஆயர் ஆராய்ச்சி பணிகள் இந்த மையத்தில் மேற்கொள்ளப்படும். திரவ மற்றும் வெப்பவியல் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் ஐஐடி பேராசிரியர்களின் கூட்டுமுயற்சியை பெரிதும் ஊக்குவிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை ஐஐடியில் செயற்கைகோள், ராக்கெட் வெப்பநிலை ஆய்வு மையம்: இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: