அரியலூர், பெரம்பலூரில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு: இன்று இரவு ஜெயங்கொண்டம் செல்கிறார்

திருச்சி: அரசின் நலத்திட்ட பணிகள் குறித்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கலந்தாய்வு செய்கிறார். இதற்காக அவர் இன்று இரவு ஜெயங்கொண்டம் செல்கிறார். தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு சென்றடைகிறதா? என்பது குறித்து நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்து வருகிறார். முதற்கட்டமாக கோவையில் கடந்த 5, 6ம் தேதிகளில் களஆய்வு மேற்கொண்டு இதனை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசின் நலத்திட்ட பணிகள் செயல்பாடு குறித்து கள ஆய்வு செய்தார். பின்னர் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 15ம் தேதி களஆய்வு நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று இரவு (14ம்தேதி) திருச்சி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் வரவேற்கின்றனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து காரில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சென்று சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். மறுநாள் காலை (15ம் தேதி) ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரத்தில் 150 ஏக்கரில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சிப்காட் தொழில்பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

இதையடுத்து, திருமானூர் ஒன்றியம் வாரணவாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 2ம் கட்டமாக மாநில அளவிலான ஊட்டச்சத்து உறுதிப்படுத்துதல் திட்டத்தை துவக்கி வைக்கிறார். பின்னர், அரியலூர் கொல்லாபுரத்தில் நடைபெறும் விழாவில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். மேலும் அரசின் நலத்திட்ட பணிகளின் செயல்பாடு குறித்து களஆய்வு செய்கிறார். அரியலூர் நிகழ்ச்சியை முடித்து விட்டு, காரில் பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று மதிய உணவு சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

மாலையில் பெரம்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று 2026 தேர்தல் பணிகள் குறித்து அறிவுரை வழங்குகிறார்.
தொடர்ந்து, பெரம்பலூரில் இருந்து காரில் திருச்சி ஏர்போர்ட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் தலைமையில் 1300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2ம் கட்டம் நாளை தொடக்கம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்குடன், முன்னோடி திட்டமான ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தினை முதற்கட்டமாக 2022ம் ஆண்டு செயல்படுத்தினேன். அதன் அடிப்படையில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் சுமார் 77.3 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர் என்ற மிகவும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பிறந்தது முதல் 6 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும்.

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களின் உடல்நலம் பேணினால் மட்டுமே, குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த முடியும். எனவேதான், தற்போது 76,705 ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 0-6 மாத குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் இரண்டாம் கட்டம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இதனை அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரணவாசி குழந்தைகள் மையத்தில் நாளை (நவ. 15) நான் தொடங்கி வைக்கவுள்ளேன்.

இத்திட்டத்தினை நான் தொடங்கும் அதேநாளில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் உடன் இணைந்து இத்திட்டத்தை துவக்கி வைத்து, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிடுமாறு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோரை நான் கேட்டுக்கொள்கிறேன். ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்ட குழந்தைகளின் தாய்மார்களை தமிழ்நாடு அரசுடன் இணைந்து, குடும்பத்தினரும் அதிக கவனத்துடன் பராமரிக்க, மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் முன் நின்று உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத வலிமையான வளமான மாநிலமாக தமிழ்நாட்டை நிலை நிறுத்த உறுதி ஏற்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post அரியலூர், பெரம்பலூரில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு: இன்று இரவு ஜெயங்கொண்டம் செல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: