கிண்டி மருத்துவமனையில் டாக்டரை அறையில் பூட்டி சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபர்: தப்பிஓட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

சென்னை: தனது தாய்க்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி, கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, வாலிபர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக பெருங்களத்தூரை சேர்ந்த பிரேமா (50) என்பவர் புற்றுநோய் காரணமாக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். நோயாளி பிரேமாவுடன் அவரது மகன் விக்னேஷ் (27) உடனிருந்து கவனித்து வந்துள்ளார். அப்போது வார்டுக்கு வரும் டாக்டர்கள் சிகிச்சை முறை குறித்து அவருக்கு சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் விக்னேஷ் தனது தாயாரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து கொண்டு சில நாட்களுக்கு முன்பு பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். புற்றுநோய் முற்றியநிலையில் இங்கு அழைத்து வந்துள்ளீர்கள். இனி உங்கள் அம்மாவை காப்பாற்ற முடியாது என்று அங்கிருந்த டாக்டர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே விக்னேஷின் தந்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அந்த துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் இருந்த அவர், மற்றொரு இடியாக தனது தாயாரும் விரைவில் இறந்துவிடுவார் என டாக்டர்கள் கூறியதால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார்.

இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், அரசு மருத்துவமனையில் 3 மாதங்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால்தான், தனது தாய் பிரேமாவுக்கு புற்றுநோய் முற்றியதாக நினைத்து, தனது தாய்க்கு சிசிச்சை அளித்த டாக்டர் பாலாஜி மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். எனவே பாலாஜியை கொலை செய்யவும் அவர் முடிவு செய்துள்ளார்.

அதன்படி நேற்று தனது தாய் பிரேமாவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு, விக்னேஷ் வீட்டில் இருந்து டாக்டர் பாலாஜியை கொலை செய்யும் நோக்கில் கத்தி ஒன்றை எடுத்து தனது இடுப்பில் சொருகியபடி, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு வந்துள்ளார். பொதுவாக டாக்டர்களை மருத்துவ அனுமதி சீட்டு இல்லாமல் பார்க்க முடியாது. இதனால் விக்னேஷ் நோயாளி போல் புற்றுநோய் பிரிவில் டாக்டரை சந்திக்க தனது பெயரில் ஓபி சீட்டு எடுக்க வரிசையில் காத்திருந்தார். காலை 10.15 மணிக்கு டாக்டர் பாலாஜியின் அறைக்கு விக்னேஷ் நோயாளி போல் உள்ளே நுழைந்தார். அப்போது டாக்டர் பாலாஜி, என்ன தம்பி உடம்புக்கு என்று கேட்டுள்ளார். அப்போது விக்னேஷ், ‘சார் நான் பிரேமாவின் மகன் ஞாபகம் இல்லையா என்று கேட்டுள்ளார். அதற்கு நீ எப்படி இங்க என்று டாக்டர் கேட்டு கொண்டிருந்த போதே, விக்னேஷ், எனது தாய்க்கு நீ கொடுத்த தவறான சிகிச்சையால்தான் புற்றுநோய் முற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். எனக்கு அதிகமாக செலவு ஆகிவிட்டது என்று ஆபாசமாக விக்னேஷ் பேசி, எனது தாய்க்கு செலவு செய்த பணத்தை நீ தான் தர வேண்டும்” என்று கத்தியுள்ளார்.

உடனே டாக்டர், நீ உடனே இங்கிருந்து வெளியே செல்…. இல்லை என்றால் போலீசை கூப்பிடுவேன் என்று சத்தம்போட்டுள்ளார். அப்போது ஏற்கனவே திட்டமிட்டப்படி இடுப்பில் சொருகி எடுத்து வந்த கத்தியை எடுத்து டாக்டர் பாலாஜியை கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் டாக்டர் பாலாஜி உதவி கேட்டு அலறினார். டாக்டரின் அறையின் கதவு மூடப்பட்டிருந்ததால் சத்தம் வெளியே கேட்காமல் இருந்துள்ளது. உடனே விக்னேஷ், டாக்டரை குத்திவிட்டு கையில் ரத்தம் சொட்ட….சொட்ட… சர்வசாதாரணமாக வெளியே சென்றுவிட்டார்.

அப்போது டாக்டர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்ததை நோயாளிகள் பார்த்து சக டாக்டர்களிடம் தெரிவித்தனர். அதன்படி சக டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்த டாக்டர் பாலாஜியை மீட்டு உடனே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே தப்பி சென்ற விக்னேஷ், சிறிது தொலைவில் கத்தியில் இருந்த ரத்தத்தை தனது துணியில் துடைத்துவிட்டு, மருத்துவமனையின் ஜன்னல் வழியாக வெளியே வீசிவிட்டு சென்றார். இதைப் பார்த்த பொதுமக்கள் விக்னேஷை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பிறகு கிண்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் இருந்து விக்னேஷை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பின்னர் விக்னேஷ் மீது மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின்படி, கிண்டி போலீசார் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 127(2), 132, 307, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மருத்துவமனையில் பெரும் பதற்றம் நிலவியது. டாக்டர் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்த மற்ற டாக்டர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக செவிலியர்களும் தர்ணா போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை கைமீறி செல்வதை அறிந்த போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி தெற்கு கூடுதல் கமிஷனர் கண்ணன், மருத்துவமனைக்கு விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதற்கிடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறிது நேரத்தில் மருத்துவமனைக்கு வந்து ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜியை சந்தித்தார். டாக்டர் பாலாஜிக்கு முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதிக ரத்தப்போக்கு ஏன்?
கத்தியால் குத்தப்பட்ட டாக்டர் பாலாஜிக்கு அதிகளவில் ரத்த போக்கு ஏற்பட்டது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். டாக்டர் பாலாஜியின் கழுத்து, காதின் பின்பகுதி, நெற்றி, முதுகு மற்றும் தலையில் இரண்டு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறது. டாக்டரின் வயிற்றில் கத்திக்குத்து எதுவும் இல்லை. மற்ற காயங்களில் எல்லாம் ரத்தம் அதிகமாக வெளியேறியிருந்தது. மருத்துவர் ஏற்கெனவே ஒரு இதய நோயாளி. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதனால் அவர், ‘அசிட்டோன்’ என்ற மாத்திரையை அவர் தினமும் எடுத்துக் கொள்வதால், சாதாரண காயங்கள் ஏற்பட்டால் கூட ரத்தம் வடிதல் அதிகமாக இருக்கும். 7 இடங்களில் கத்திக்குத்தப்பட்டு உள்ளது. அதனால் அதிகமாக அவருக்கு அதிக ரத்தம் வெளியேறி உள்ளது. உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அனைத்து துறை நிபுணர்களும் சேர்ந்து அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 யூனிட் ரத்தம் அவருக்கு வழங்கப்பட்டது. தற்போது அவர் நலமாக இருப்பதாக தெரிவித்தார்.

உயிர் பிழைத்தார் டாக்டர் பாலாஜி
கைது செய்யப்பட்ட வினேஷ், டாக்டர் பாலாஜியின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு, தலையில் என மொத்தம் 7 இடங்களில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த டாக்டர் பாலாஜிக்கு அதிகளவில் ரத்த போக்கு ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்தார். அப்போது சக டாக்டக்டர்கள் பாலாஜியை 5 நிமிடங்களுக்குள் மீட்டு ஐசியூவில் செயற்கை சுவாசம் கருவி பொருத்தி சிகிச்சை அளித்தனர். இதனால் அவர் சிகிச்சை அளித்த 3 மணி நேரத்தில் சுயநினைவுக்கு திரும்பினார். உரிய நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளித்ததால் பாலாஜி உயிர்பிழைத்ததாக சிசிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

டாக்டர் பாலாஜியை குத்தியது ஏன்..? கைதான விக்னேஷ் பரபரப்பு வாக்குமூலம்
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் புற்றுநோய் பிரிவு தலைவர் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தியது ஏன் என்று கைது செய்யப்பட்ட விக்னேஷ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

விக்னேஷ் விசாரணையின் போது அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:
தனது தாய் பிரேமாவுக்கு கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை டாக்டர் பாலாஜியிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். தாயாருக்கு கீமோ சிகிச்சை மட்டும் அளித்த நிலையில், உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் தனியார் டாக்டரிடம் தற்போது தாய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். இருந்தும் அவரது தாய்க்கு நோயில் இருந்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. மேலும் தனது தாயாருக்கு கீமோ தெரபிக்கு ஒவ்வொரு முறையும் ₹20 ஆயிரம் செலவு ஆகிறது.

இதனால் விக்னேஷ் டாக்டரை சந்தித்து செலவு செய்த பணத்தை கேட்டும், தனது தாயாருக்கு ஏன் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் கேட்கச் சென்றுள்ளார். அப்போது டாக்டர் பாலாஜிக்கும் விக்னேசுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் டாக்டர் விக்னேஷை கடுமையாக திட்டி கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து கையில் எடுத்து வந்த கத்தியால் டாக்டரை விக்னேஷ் குத்தியுள்ளார். இவ்வாறு விக்னேஷ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.

உயிருக்கு போராடிய மகனை பார்க்க கதறி துடித்த தாய்..
டாக்டர் பாலாஜி கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. மகனை கத்தியால் குத்திய தகவல் அறிந்து டாக்டர் பாலாஜியின் தாய் மற்றும் அவரது மனைவி மருத்துவமனைக்கு அலறி அடித்தபடி ஓடி வந்தனர். அப்போது ஐசியூ வார்டு முன்பு பாலாஜியின் தாய் அழுது புலம்பியது அங்கு இருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

அரசு மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: விரிவான விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது: கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் – காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கிண்டி மருத்துவமனையில் டாக்டரை அறையில் பூட்டி சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபர்: தப்பிஓட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: